'மசாஜ்' உடலுக்கு புத்துணர்ச்சியை தருகின்றது!

தற்கால இயற்கையான மருத்துவ முறையில் "மசாஜ்"ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புகளுக்கு தீங்குகள் இன்றி நன்மை தரும்.

தசைகள்:
"மசாஜ்" செய்வதன் மூலம் தசைகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில் லாக்டிக் ஆசிட் சேரும். "மசாஜ்" தசைகளில் சேரும் லாக்டிக் ஆசிட்களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.

இரத்த ஓட்டம்:
"மசாஜ்" செய்யப்படும் பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் அந்த உடல் உறுப்புகளுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். "மசாஜ்" செய்வதால் இரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

நரம்புகள்:
நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் "மசாஜ்," நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைப்பதுடன், அவற்றை மென்மையாக்கும். சுறுசுறுப்புடன் செய்யப்படும் "மசாஜ்" நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.

தோல்:
"மசாஜ்" செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைகிறது. இதனால் உடலில் காணப்படும் தீயகழிவுகள் வியர்வை மூலம் வெளியேற உதவும்.

செரிமான மண்டலம்:
வயிற்றில் "மசாஜ்" செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

சிறுநீர் மண்டலம்:
"மசாஜ்" செய்வது சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகிறது.

இதயம்:
முறையாக செய்யப்படும், "மசாஜ்," இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. பொதுவாக, "மசாஜ்" செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத்துணிகள் அல்லது மருந்து எண்ணெய்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

"மசாஜ்" செய்வதை பின்வரும் நிலமைகளில் தவிர்க்க வேண்டும்: 

  • காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நேரங்களிலும், தோல் வியாதிகள் உடையவர்களும் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறுகுடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சினை உடையவர்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.
Article By TamilFeed Media, Canada
2674 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle