வேர்கள் அறியா விருட்சம்

இனி  வரும்  ஐம்பது  வருடங்களில்   மில்லியன்  கணக்கில் இருக்கும்  புதிய  சந்ததிகள்  நமது  முன்னோர்களின் பின்னணி  ஈழம்  என்பதை  வார்த்தையளவில்  பேசிவிட்டு  கடந்துபோகும் சமுதாயமாகவே  இருக்கும் என்பது வெளிப்படை.
வேர்கள் அறியா விருட்சம்

இரண்டாம் உலகப்போரின் முடிவில் நாஸி ஜெர்மனி துண்டாடப்பட்டு சுவர்கள் எழுப்பப்பட்டு நியூரென்பேர்க் வழக்குகள் மூலம் யூத இனப்படுகொலைகளுக்கு குறைந்தபட்ச நியாயம் கிட்டியது என்பதோடு வரலாறு தனது அத்தியாயங்களை முடித்துக்கொண்டாலும் ஆராயவேண்டிய பல நுணுக்கமான தான பரப்புகளில் யூத சமுதாயம் சிக்கல்களை எதிர்கொள்ள ஆரம்பித்தது.

பெர்லினில் எச்சசொச்சமாக இருந்த யூதர்கள் புதிய ஜெர்மனியில் தம்மை இனம்காண திணறினர். ஒருவிதத்தில் அமெரிக்க ரஷிய கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனி 1991 இணைந்ததன் பின்னதாக கூட இந்த குழப்பம் நீடித்தது எனலாம். தாம் ஜேர்மானிய யூதர்களா அல்லது யூத ஜெர்மனியர்களா என்கிற கேள்வியின் பின்னணியில் யூதர்கள் சவால்களை எதிர்கொள்ள ஆரம்பித்தது மட்டுமன்றி அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த யூதர்கள் தம்மை பிறிதோர் கிளையாக அடையாளபடுத்த முயன்ற அதேவேளை இஸ்ரவேலின் மீள் தோற்றத்தின் பின் அங்கு சென்றவர்கள் இன்னுமோர் தனித்துவமான அலகாகினார். இலத்தின் அமெரிக்க பின்னணி உடைய யூதர்கள் பெரும்பாலும் யுத்தத்தின் பின் ஜேர்மனிக்கு திரும்பியதும் இங்கே குறிப்பிட வேண்டிய பிறிதோர் விடயமாகும்.

ஹிட்லரின் தூய ஆரிய இனமும் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்குக்கும் ஜேர்மனிய சாம்ராச்சியமும் என்கிற பித்துக்குளித்தனத்தால் ஐரோப்பிய யூதர்களின் இன பரம்பல் சார் சமநிலையை மீள சரி செய்ய முடியாத பேரவலம் தாக்கியது. இதுவே 945இன் பின்னதான பிராந்திய ரீதியான தனித்துவமான அலகுகளின் தோற்றத்தின் பின்னணி எனலாம். 
அதேபோலவே இப்போது எழுகிற கேள்வி 2009இன் பின்னதாக இலங்கைக்கு வெளியே ஈழ தமிழர்களின் சந்ததிகள் எதிர்நோக்க இருக்கும் அடையாளம் சார் சவால்கள் என்னவாக இருக்கும் என்பதே. பெரும்பாலும் நான்காம் தலைமுறையை அண்மிக்கும் போது துரதிஷ்டவசமாக சரித்திரத்தின் அத்தியாயங்கள் அவற்றின் உணர்வுத்தன்மை மழுங்கடிக்கபட்டு வெறும் சம்பவமாக பார்க்கும் சமுதாயம் ஒன்றே எஞ்சியிருக்கும். 

இந்நிலையில் எமது சந்ததி எப்படி இருக்க போகிறது என்று சிந்தித்தால் நியோ மொரிஷியஸ் தமிழர்களை காட்டிலும் ஆளுமை மிக்க பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு அதிகமுடைய ஈழ தமிழ் எச்சங்கள் மேற்குல நாடுகளில் வேரூன்ற ஆரம்பிக்கும். இந்த சந்ததி மூல அடையாளமாக ஈழ தமிழினத்தை மேற்கொள் காட்டினாலும் அந்தந்த நாடுகளின் பெரும்பான்மை சார் அடையாளங்களின் செல்வாக்கினால் சொந்த அடையாளங்கள் பெரிதும் மழுங்கடிக்கபடலாம்.
உதாரணமாக ஈழ தமிழர்களின் செறிவு மிக்க கனடாவில் தமிழ் ஒரு கற்கை மொழியாக இருக்கும் நிலையில் இருந்து பிரயோக மொழி என்கிற ஸ்தானத்தை அடையமுடியாது என்பது வெளிப்படை. 

இந்நிலையில் தலைமுறைகள் கடக்கும் போது அது கற்கை மொழியாக நீடிக்குமா என்பதும் சந்தேகமே. தமிழர்களை பொறுத்தவரை மொழியே இன அடையாளத்தின் அடிப்படை என்கிற ரீதியில் புலம்பெயர் சந்ததிகள் அடையாளம் சார் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள ஆரம்பித்து சில பத்தாண்டுகள் ஆகின்றது. இதன் வீரியத்தை பிரயோக மொழிகளாக வேற்று மொழிகள் இருப்பது அதிகரிக்கிறது. 

மூன்றாம் தலைமுறையுடன் கணிசமான அளவு புதிய தலைமுறையினர் தமிழ் மொழி மூலமான புரிதலை இழக்க நேரிடும். இப்போது இன பல்வகைமையை மிக முற்போக்காக ஆதரிக்கும் நாடுகளில் புலம் பெயர் தமிழர்கள் வாழ்வதே இனிவரும் தலைமுறைகளின் அடையாள அழிதல்களை தாமதப்படுத்தும் என்பது ஒரே ஆறுதல். இனி வரும் ஐம்பது வருடங்களில் மில்லியன் கணக்கில் இருக்கும் புதிய சந்ததிகள் நமது முன்னோர்களின் பின்னணி ஈழம் என்பதை வார்த்தையளவில் பேசிவிட்டு கடந்துபோகும் சமுதாயமாகவே இருக்கும் என்பது வெளிப்படை. காலச்சக்கரத்தின் சூழற்சியில் ஒடுக்கப்பட்ட இனத்தின் மூல வேர்கள் வெகு ஆழத்தில் புதைக்கபடுவதை விசாலிக்கும் விருட்சங்கள் உணராதிருத்தலே நியதி!

Article By Triden Balasingam, Canada
975 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle