சரியான தீர்ப்பு .

சிறுகதை.

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை.அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர் . வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் எழுந்து, “இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வழக்கறிஞர் எழுந்து, “ஏன் இப்படி தீர்ப்பு வழங்கினீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

Article By TamilFeed Media, Canada
6484 Visits

Share this article with your friends.

More Suggestions | Stories