பாடலாசிரியர் நா. முத்துகுமார்

எத்தனை எத்தனை வெற்றிப் பாடல்கள். மனதை மயக்கும் காதல் பாடல்கள்... ஆனால் மனிதர் ஒரு நாளும் அந்த வெற்றிகளுக்காக சுயமோகம் கொண்டதில்லை. அடுத்தவர் பாராட்டினால் மென்மையாக சிரித்துவிட்டுக் கடந்து செல்வார்.

பாடலாசிரியர் நா. முத்துகுமார்
Back 969 Twitter Google Twitter Facebook

பாடலாசிரியர் நா. முத்துகுமார் 
1975 - 2016

கவிஞர் நா.முத்துகுமாரின் இழப்பு, தமிழ்த் திரையுலகிற்கும் இலக்கிய உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

கவிஞர்களில் பேரரசன் முத்துக்குமார். ஆனால் ஒரு மனிதனாக, எளியோருக்கும் எளியோனாக வாழ்ந்தவர், பழகியவர். கோபக்காரர்தான், ஆனால் அது அத்தனை சுலபத்தில் யாருக்கும் தெரியாது.

நம் சாவுக்கு வந்து தோள்கொடுக்க வேண்டியவர்கள் சாவுக்கு நாம் போய் நிற்பதுதான் சோகங்களிலும் துயரமானது. 

திரையுலகுக்கு பேரிழப்பு என்று வெறுமனே சொல்லி விட முடியாது. ஒட்டுமொத்த தமிழுக்கும் இவரது மரணம் மிகப் பெரிய இழப்பு. காரணம், முத்துக்குமார் நல்ல கவிஞர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. முத்துக்குமார், நடக்கவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. அதற்குள் அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

மிக இளம் வயதில் தமிழ் சினிமா ஒரு பட்டுக்கோட்டை கல்யாணத்தை இழந்தது. நூற்றாண்டில் நிற்கும் தருணத்தில் இன்னொரு மக்கள் கவிஞனை இழந்து தவிக்கிறது. ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது வழக்கமான வார்த்தைப் பிரயோகம்தான். ஆனால் முத்துக்குமார் விஷயத்தில் அது நூறு சதவீத உண்மை!

அவர் விடைபெற்றாலும், அவர் விதைத்துச் சென்ற கனவுகளும் நம்பிக்கைகளும் நமக்கிடையே எப்போதும் இருக்கும். அவரது ஈரம் காயாத நினைவுகளைப் போல்.

ஒவ்வொரு தந்தை - மகளுக்கும், தேசிய கீதமாகவே மாறிப் போய் விட்டது, இவருக்கு முதல் தேசிய விருதை வாங்கி கொடுத்த ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல்.

சைவம் படத்தில் 2வது முறையாக இவர் விருது வாங்கியபோது ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் மகிழ்ந்து களித்தது. 

சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாமல், சமூக அவலங்களுக்காகவும் தனது தமிழ் மூலம் குரல் கொடுத்த, நிச்சயம் முத்துக்குமார் மிகப் பெரிய மனிதர் தான்.

Back 969 Twitter Google Twitter Facebook