பத்திரிக்கையாளர் டன்ஸ்டன் மணியின் இன்னும் பெயர் வைக்கல

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சர்வதேச இணைப்பாளர் டன்ஸ்டன்  மணிஅண்மையில் தமது புதிய முயற்சியின் ஒரு கட்டமாக "இன்னும் பெயர் வைக்கல" சிறுகதை தொகுப்பினை வெளியிட்டார். எமது TAMILFEED அலுவலகத்திற்கு வருகை தந்த அவருடன் கலந்துரையாடியதில் பல ருசிகர தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். 

பத்திரிக்கையாளர் டன்ஸ்டன் மணியின் இன்னும் பெயர் வைக்கல
Back 5492 Twitter Google Twitter Facebook

 ​​​​​

பெயர் சூட்டுதல்  என்பது ஒரு தனிச்சிறப்பு மிக்கதொரு கலை  ஆகும்.ஒவ்வொரு பெயரும் அது கொண்டுள்ள  விடயத்தின் பிரதிபலிப்புக்களே .பிறரிடமிருந்து, பிற பொருட்கள் சேவைகளிடமிருந்தும் தம்மை  எவ்வாறு தனித்து பிரதிபலிக்க செய்தல் என்பது அது கொண்ட நாமகரணத்திலேயே தங்கியுள்ளது. 

அவ்வாறே  எழுத்தாளர்கள் தமது நூல்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபடும்போது அவற்றிற்கான பெயரிடலில் விஷேட கரிசனையை கொண்டிருப்பார்கள் . எனவே நீங்களும் உங்கள் சிறுகதை தொகுப்பிற்கு இவ்வாறு சுவாரஷ்ய நோக்கத்துடன் பெயர் வைத்திருக்கலாம் என நாம் கேள்வி எழுப்பினோம். 

இல்லை. அந்த கருத்து முற்றிலும் தவறானது. இந்த சிறுகதை தொகுப்பு மலையக வாழ்வியலை மையமாகவும் அங்கு நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகவும் கொண்டது. அவ்வாறே பெயர் வைத்தல் எனும் விடயத்தில் மலையக சமூகத்தினர் கொண்டுள்ள சிற்சில பிணக்குகளை, ருசிகர சம்பவங்களும் அடங்கலாக  ஓர்சிறுகதை எழுதப்பட்டும் உள்ளது . எனவே அதனையே இந்த தொகுப்பின் தலைப்பாக வைத்தேன்.என அவர் பதிலளித்தார்,


மேலும் இந்த நூல் பற்றி மேலதிகமாக சொல்ல போனால் ஒரு பெண் சார்ந்த விடயம் . இந்த சிறுகதை தொகுப்பினை எழுத எனக்கு ஒன்றரை மாதங்கள் ஆனது. மலையகத்தில் நான் தினசரி கண்ட  விடயங்களை கொண்டே இந்த சிறுகதை தொகுப்பினை எழுதினேன்.இந்த தொகுப்பிற்கு  தூண்டுதலாக இருந்தது ஒரு பெண் சார்ந்த சம்பவம் ஆகும்.மலையகத்தில் தேயிலை தோட்டமொன்றில் வேலை செய்யும் பலர் இப்பொழுது சிறுத்தைகளுக்கு இரையாகி வந்துள்ளனர். இவ்வாறு சிறுத்தை ஒன்றுக்கு பலியான  பெண் தொடர்பில் புலன் விசாரணை செய்யும் காவல்அதிகாரியும்,அவரின் விசாரணைகள் தொடர்பிலும் ஆரம்பமானது இந்த கதை தொகுப்பில் அமைந்தது ஒரு கதை. அவ்வாறே இன்னும் பல நான் எனது வாழ்நாளில் கண்டும் , கேட்டும் அனுபவித்ததுமான சில சம்பவங்களை வைத்தே இந்த கதைகளின் தொகுப்பினை எழுதினேன் என்றார்.

இந்த சிறுகதை தொகுப்புக்கு ஏன் இன்னும் பெயர் வைக்கல? 

பெயர் வைக்கப்படாத இன்னும் பல விடயங்கள் நம் மத்தியில் நடந்தேறிய வண்ணமே இருக்கின்றன. இந்த பெயர் வைக்காமையே அவ்வாறானதொரு சம்பவத்தின் அடிப்படையாக அமைந்ததுதான். பலரும் நினைப்பதுண்டு இந்த தலைப்பு ஏதேனும் சுவாரஸ்யத்திற்காக வைக்கப்பட்டது என்று. ஆனாலும் அது உண்மை அல்ல. இந்த சிறுகதை தொகுப்பில் அது பற்றிய கதை ஒன்றும் உள்ளது.

இந்த சிறுகதை தொகுப்பிற்கு விலை குறிப்பிடவில்லையா?

எனது படைப்பிற்கு விலை நிர்ணயம் செய்ய நான் விரும்பாதவன், அது மட்டுமன்றி இதன் மூலம் கிடைக்கும் நிதியினை கொண்டு மலையகத்தில் இருக்கும் சில பின் தங்கிய பாடசாலைகளுக்கு கழிவறை வசதிகளை செய்து தர திட்டமிட்டு உள்ளேன் . 

மேலும் இந்த நூல் அறிமுக விழாவினை வெகுவிரைவில் கனடா,பிரான்ஸ், உள்ளிட்ட வெளி நாடுகளிலும் நடத்த திட்டமிட்டு உள்ளேன். அதன் மூலமும் கிடைக்கும் நிதியினை மேற்குறிப்பிட்டவாறு செலவிட திட்டமிட்டு உள்ளேன். 

மேலும் இந்த நூல் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள் ?

இந்த தலைப்பு "இன்னும் பெயர் வைக்கல" என்பது நான் பிறந்து வளர்ந்த சமூக சூழலை ஞாபகப்படுத்தும் வகையில் அமைந்தது. அவ்வாறே நான் இப்பொழுது வாழும் சூழல் வேறாக இருந்த போதிலும் நான் வளர்ந்த சூழலையும் அங்குள்ள மனிதர்களையும் மறவாமையே இதற்கான காரணம் ஆகும்.என் சமூகத்தினரை பெருமை படுத்தும் விதமாகவே இந்த பெயரும் அமைந்தது.

வெளிநாட்டில் வாழும் இலங்கையின் மூத்த பத்திரிக்கையாளர் நீங்கள் . இப்பொழுது காணப்படும் இலங்கையின் ஊடக வளர்ச்சிபற்றி நினைப்பது என்ன?

நான் இலங்கையின் பத்திரிகை துறையில் செய்தியாளராக இருக்கும்போது கிடைக்கப்பெற்ற வளங்கள் மிகவும் குறைவு.பல்வேறுபட்ட சிரமத்திற்கு மத்தியில் தான் ஒரு செய்திக்காக பகீரத பிரயேத்தனம் செய்யவேண்டி  இருக்கும். அவ்வாறு கிடைக்கும் செய்திகள் பல தலைமை ஆசிரியரின் குப்பை கூடைக்குள் வீசப்பட்ட தருணங்கள் அதிகம். ஆயினும் இந்த நவீன காலத்தில் ஊடகவியலாளர்கள் மிக இலகுவாக தமது சேவைகளை செய்து முடிக்கும் வகையில் சமூக ஊடகங்களும் , தொடர்பாடல் வசதிகளும் காணப்படுகின்றது. இது வரவேற்க தக்க விடயம் ஆகும்.

ஊடகவியலாளர்கள் மிகவும் திறமையானவர்கள்.சர்வ சாதாரணமாக தமது ஊடக பணியினை செய்யும் திறமை மிக்கவர்கள்.இது இலங்கை ஊடக துறைக்கு நல்ல வளர்ச்சி என்பேன்.

ஊடகவியலாளர் என்பவனுக்கு தேடல் என்பது மிகவும் அவசியமானது.சமூக பொறுப்பினை கொண்டிருக்கும் அவனுக்கு சரியான விடயங்களை தேடி பகிரும் திறன் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஊடகங்களின் மீதான மக்களின் பரீட்சயம் எவ்வாறு இருக்கின்றது?

எமது சமூகத்தினர் ஊடகங்களின் ஊடகமாகவே இருக்கின்றனர். மிக விரைவாக செய்திகளையும் , சம்பவங்களையும் பகிர்ந்து தெரிந்து கொள்ளும் வல்லமை இவர்களுக்கு வந்துவிட்டது. இலகுவில் இருந்த இடத்தில் அமர்ந்தபடியே அனைத்து உலக தகவல்களை  உள்ளங்கைகளில் பார்க்கும் வண்ணம் நவீனத்துவம் பெற்றுவிட்டனர் . 

ஊடகங்கள் என்பவை தமது உற்ற மனைவியை விட கற்புடன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன் நான்.மக்களுக்கு செய்தி மற்றும் தகவல்களை வழங்கும் பாரிய பொறுப்பினை கொண்ட ஊடகங்கள் பொறுப்பு வாய்ந்ததாகவே இருக்க வேண்டும்.ஊடகங்கள் என்பவை மக்களுக்கு அறிவை புகட்ட கூடியதாக இருக்க வேண்டுமே ஒழிய சீர் கேடுகளுக்கு  வழிவகுப்பதாக இருக்க கூடாது என்பதில் நான் கரிசனையுடன்இருப்பவன் என்கிறார் ஊடகவியலாளர் டன்ஸ்டன்  மணி.

ஜனநாயகம் பற்றிய புரிதல் மக்களுக்கு இல்லையா?

கட்டாயம் இருக்கின்றது. மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்களாகவே இருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயம். காலகாலமாக கட்சிகள், கொள்கைகள் என்று வாழ்ந்த காலம் போய் ஜனநாயக புரிதல் , சமூக விழிப்புணர்வு என்று மக்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
சாதக பாதகங்கள் சரிசமமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக வளம்மிக்க ஆரோக்கியமான சூழ்நிலையினை ஊடக சமூகமும் , மக்களும் கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக டன்ஸ்டன் மணி எமது பகிர்ந்துகொண்டார்  

 

Back 5492 Twitter Google Twitter Facebook

Related View More...