தேசிய கொள்கைகளின் மூலம் காய் நகர்த்தும் உள்ளூராட்சி தேர்தல் வியூகம் 

தேசிய  கொள்கைகளின் மூலம் காய் நகர்த்தும் உள்ளூராட்சி தேர்தல் வியூகம் 

சிறப்பானதும் சிக்கலானதுமான விடயங்களை கொண்ட 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தல் களம்  பற்றிய சிறு ஆய்வு.

06/02/2018 | Views 6625

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் 

ஓரிரு நாட்களில்  இலங்கையில் இடம்பெறவிருப்பதும் அனைவராலும் எதிர் பார்க்கப்படுவதுமான  நிகழ்வு இந்த உள்ளூராட்சி தேர்தல் ஆகும் . 15.8 மில்லியன் வாக்காளர்களை கொண்டு 24 மாநகராட்சிகள், 41 நகரசபைகள், 276 பிரதேச சபைகள் உள்ளடங்கலாக மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு மொத்தமாக 8293 உறுப்பினர்களை தேர்வு செய்யும் நிகழ்வாக இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது.

வழமைக்கு மாறாக அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் இடம்பெறுவது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதன் முறை ஆகும்.அதாவது கலப்பு முறை மூலமான தேர்தல் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதுவே  இந்த தேர்தலின் சிறப்பியல்புகள் ஒன்றாகும்.இந்த முறையின் படி 60% சதவீத உறுப்பினர்கள் குறிப்பிட்ட வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், எஞ்சும் 40% சதவீத உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவப்படியும் தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக அறியப்படுகின்றது.


கட்சிகளும் வேட்பாளர்களும்.

4 பிரதான கூட்டமைப்பு கட்சிகளையும் ,40 இற்கும் மேற்பட்ட பிரதான கட்சிகளும், 22 பெரும்பான்மை கட்சிகளையும் ,  உள்ளடக்கிய வேட்பாளர்களை இந்த தேர்தல் சந்திக்கவிருப்பது அறியப்படுகின்றது.

 

  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றிலை சின்னத்தில் சில மாவட்டங்களிலும், இலங்கை சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் சில மாவட்டங்களிலும் போட்டியிடுகிறது. 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிடுவது சிறப்பம்சமாகும்..

 

  • ஐக்கிய தேசியக் கட்சியானது பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யானை சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்கட்சிச் சின்னத்தில் சம்பிக்க ரணவக்க தலைமையில் ஜாதிக எல உறுமய கட்சியும் போட்டியிடுகின்றது. ரவூப் ஹக்கீம் தலைமையில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழும், சில சபைகளில் தனித்தும் போட்டியிடுகின்றது.

 

  • மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதே நேரம்,இரத்தினபுரி, கண்டி, கொழும்பு, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச உள்ளூராட்சி சபைகளில்  ஏணி சின்னத்தில் "ஒருமித்த முற்போக்கு கூட்டணி" என்ற பெயரில் தனித்துப் போட்டியிடுகிறது.

 

  • இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இலங்கை பொதுசன முன்னணி என்ற பெயரில் புதியகட்சியை ஆரம்பித்து போட்டியிடுகிறார்.இக்கட்சி தாமரைப்பூ  மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறது.

 

  • இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் சித்தார்த்தன் தலைமையில் புளொட் அமைப்பும் இணைந்து  போட்டியிடுகிறது.

 

  • கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி "தமிழ்த் தேசியப் பேரவை" என்ற பெயரில் சைக்கிள் சின்னத்தில் வட, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகிறது.


 தேர்தலின் பின்னணியும் இதுவரையான நிகழ்வுகளின் சாராம்சமும் 

கடந்த 2011 ஆம் ஆண்டு இறுதியாக இலங்கையில் உள்ள 322 உள்ளூராட்சி சபைக்களுக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. இலங்கையில் நிலவிவந்த யுத்த சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் காரைதுறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான  தேர்தல் இடம்பெற வில்லை ஆயினும் அதன் பின்னர் ஒரு மாநகர சபையும் ஐந்து பிரதேச சபைகளுமாக புதிதாக தோற்றுவிக்கப்பட்டு, தற்போது ஒட்டுமொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் இலங்கையில் காணப்படுகின்றன.
 
உள்ளூராட்சி  சபைகளுக்கான ஒட்டுமொத்த ஆட்சிக்காலம் 4 ஆண்டுகள். ஆயினும் இவற்றின் ஆட்சி காலத்தை ஓராண்டு வரை நீடிக்கும் உரிமை மத்திய அரசாங்கத்திற்கு உண்டு. 

தேசிய பிரச்சினைகளின் ஆதிக்கம் 

அண்ணளவாகவே 65000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு கொண்ட சிறிய நாடு இலங்கை. இதில் கடந்த காலங்களில் நிலவி வந்த நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பல்வேறுபட்ட அரசியல் ரீதியான மற்றும் தேசிய ரீதியிலான குளறுபடிகளும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.அவ்வாறே இந்த முறையும்  இவ்வகையான தேசிய பிரச்சனைகளை  மையமாக கொண்டு தேர்தல்களுக்கான வாக்கு  சேகரிப்பு  யுக்தி இடம்பெற்று வருவதை அறியமுடிகின்றது.

தலைமைகளின் நேரடி களப்பணியில் குளறுபடிகள் 

இம்முறை சில பிரதான கட்சிகளின் தலைமை வேட்பாளர்களும், தலைவர்களும் தேர்தல் களத்தில் நேரடியாக பிரச்சார நடவடிக்கைகளில் களமிறங்கி இருப்பது அறியக்கூடியதாகவும் இருக்கின்றது. இலங்கையின் வரலாற்றில் இவ்வகையாக சிறிய நிலை வேட்பாளர்களும் பிரதான தலைமைகளும் ஒன்றித்து  ஓட்டு சேகரிக்கும் நிர்பந்த நிலை இந்த கலப்பு முறை தேர்தலின் மூலமாக ஏற்பட்ட மாறுதல் ஆகும்.இதன் காரணமாக சிறிய நிலை  வேட்பாளர்களான பிரதேசசபைக்கான தலைவர்கள் தமது  பலத்தினை நிரூபணம் செய்வதில் பெரும் சவாலினை எதிர்கொள்வதாகவும் தெரியவருகின்றது.

பெண்களின் பங்களிப்பும் சவால்களும்,

இம்முறை பெண் வேட்பாளர்களின் பங்களிப்பானது 25 % சதவீதம் கட்டாயமாக்கப்பட்டமை ஒரு புதிய சவாலினை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச பெண் வேட்பாளர்களும் களமிறங்கி இருப்பது மகிழ்ச்சிகரமானதாக உள்ளது.

எவ்வாறு பெண் வேட்பாளர்களின் வருகை அதிகமாக காணப்படுகிறதோ அவ்வாறே பெண் வேட்பாளர்கள் மீதான தேர்தல் வன்முறைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.பல்வேறுபட்ட தேர்தல் வன்முறைகளை பார்க்கும்போது அதில் பெரும்பான்மை இடம் வகிப்பதும், முறைப்பாடுகள் அதிகம் கிடைக்கப்பெற்றதுமாக பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளை குறிப்பிட்டு கூறலாம். 


தேர்தலை சூடுபிடிக்க செய்யும் புற சூழல் காரணிகள் 

அண்மைய அரசியல் நிகழ்வுகளும் , சம்பவங்களும் தேர்தல் தொடர்பில் தமது ஆதிக்கத்தை செலுத்த தவறவில்லை எனலாம், இது பொதுவாக வேட்பாளர்களுக்கான ஓட்டு  சேகரிப்பு நடவடிக்கைகளுக்கான கருவியாக பயன்படுகின்றமை அறியப்பட்டுள்ளது.

இதில் முக்கிய இடங்களை வகிக்கும் நிகழ்வுகளில் பிரதானமானது பிணை முறிகள்  தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு ஆகும், இதற்கான அறிக்கை சமர்பிக்கப்படவிருப்பது தேர்தலின்போதான  வாக்காளரின் மனநிலையை ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு மலையக மற்றும் ஊவா பிரதேசங்களை பொறுத்தவகையில் அண்மையில் இடம்பெற்ற தமிழ் மகளிர் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்த சம்பவமும் அது தொடர்பிலான கல்வி அமைச்சின் நடவடிக்கைகளும் தேர்தல் விவகாரத்தில் வேட்ப்பாளர்களின் பகடைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இம்முறை வேட்பாளர்களுக்கும்,வாக்காளர்களுக்குமான புதிய சவாலாகவே இந்த கலப்பு முறையிலான தேர்தல் அமையப்பெறுள்ளது .இது தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகளை தவிர்த்து ஆரோக்கியமான முறையில் நாட்டின் சரியான தலைமைத்துவ நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒரு தேர்தல் நிகழ்வாக கணிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் வாக்கு எதற்கு?


நீங்கள் செய்திகள் வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவது?

Posted by TamilFeed on Friday, May 18, 2018