உள்ளூராட்சிசபையின் ஆதிக்கத்தால் இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா 

உள்ளூராட்சிசபையின் ஆதிக்கத்தால் இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா 

இலங்கையின் அடித்தளத்தினை அசைத்துப்பார்க்கும் தேர்தலின் பின்னரான அதிரடி நிகழ்வுகள் 

13/02/2018 | Views 7770

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் விளைவுகளால் இலங்கை அரசியல் அமைப்பில் மாற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவது உண்மையாகும். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கூட்டமைப்பானது வெறுமனே உள்ளூர் ஆட்சிசபை தேர்தலின் மூலமாக  பலகாலமாக ஒரு நாட்டின் அரசியலில் பேராதிக்கத்தை செலுத்தி வந்த மற்றும் ஆட்சியில் நிலைகொண்டுள்ள கட்சியின் ஆணிவேரையே அசைத்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் செயலாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த உள்ளூர் ஆட்சி சபையின் தேர்தலின் போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  கட்சியானது 231 உள்ளூராட்சி சபைகளை தமது இடத்தினை தக்கவைத்தது. இது தொடர்பிலான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாட்டில் காணப்படும் நிலையற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும் என தமது  கருத்தினை முன்வைத்தார்.

இந்த கருத்தின் எதிரொலியாக நாடாளுமன்றத்தில் அடித்தளமும் ஆட்டம் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.தேசிய அரசாங்கத்தின் பெரும்பான்மை கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் , ஐக்கிய தேசிய கட்சிக்கும்  இடையில் முறுகல்நிலை ஏற்பட்டிருப்பதை இதன்போது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

உள்ளூராட்சிசபை தேர்தலின் பின் ஐக்கிய தேசிய கட்சியானது தனித்து ஆட்சியை கொண்டு செல்ல தீர்மானித்து இருப்பதாகவும், இதனை மேற்கோள் காட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், கட்சிக்கு புதிய தலைமைத்துவ ஏற்பாளராக சஜித் பிரேமதாச அல்லது கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவருக்கு கட்சியின் தலைமைத்துவத்தினை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது தமது நிலைப்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்திருப்பதாக பிபிசி ஊடகத்தினை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இவற்றினை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது விலகிக்கொள்ள தீர்மானம் எடுத்தும் இருப்பதாக ஊடக தகவல்கள் அறியத்தருகின்றன.அவ்வாறே ஐக்கிய தேசிய கட்சியானது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தனி ஆட்சியமைப்பினை ஏற்படுத்துமேயானால் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கவும் தயார் நிலையில் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மேலும் தெரிவித்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

இவர்களின் நிலைப்பாட்டினை ஜனாதிபதியும் ஏற்றிருப்பதாகவும் , பிபிசி செய்தி சேவையின் செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் கட்சியின் எதிர்கால நிலைப்பாடுகள் குறித்த கூட்டமொன்று இன்றையதினம் இடம்பெறவிருப்பதை ஐக்கிய தேசிய கட்சியினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்போது கட்சியில் இடம்பெறவிருக்கும் மாற்றங்கள் தொடர்பிலும், தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பிலும் பிரதமருடன் கட்சி உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு ஏதேனும் சிக்கல்கள் நிலவும் பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் தனி அரசாங்கத்தினை ஸ்தாபிக்கவும் முடியும் எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கருத்து வெளியிட்டு இருக்கிறார்.

மக்கள் ஆணையின்படி தனக்கு தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி உள்ளதாகவும், அதற்கு முன்னர் தீர்மானம் ஒன்றை எடுக்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறியிருப்பதாக அறியப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் ,தேசிய அரசாங்கத்தின் பிளவு நிலையை பொறுத்த வகையினும், அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பினைமுறி மோசடி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது பதவியை ராஜினாமா செய்ய பலராலும் யோசனை முன்வைக்கப்பட்டு வந்தாலும், இன்று இடம்பெறவிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சந்திப்பினை அடுத்தே பல அதிரடி முடிவுக்கு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேற தீர்மானித்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்படும்,ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்க ஸ்தாபிப்புமாக ஊசலாடிக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தின் நிலையானது கலைக்கப்படும் சந்தர்ப்பத்தினை பலரும் எதிர்பார்த்திருப்பது அறியப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலின் நிலைப்பாட்டினை மட்டும் மையமாக கொண்டு நாடாளுமன்றத்தினை கலைக்க பிரேரணை முன்வைக்க முடியாது.தற்போதைய நாடாளுமன்றத்திற்கு 5 ஆண்டுகள்  நீடிக்கும்   ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர். எனவே 2020 ஆண்டுக்குள் ஏதேனும் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் யோசனை முன் வைக்கப்பட்டால் அது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பயத்துடனேயே நிறைவேற்றப்படும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இவை ஒரு புறம் இருக்க உள்ளூராட்சிசபை தேர்தலின் தாக்கமானது நாட்டின் பங்குச்சந்தையில் பாதிப்பினை ஏற்படுத்தி இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் செயற்பாட்டினை காணும்போது உள்ளூராட்சி தேர்தலின் பின்னரான பங்கு பரிவர்த்தனை நிகழ்வுகள் சரிவுநிலையை காட்டியிருப்பதை அறியமுடிகின்றது. கடந்த வாரத்தில் 0.8 வீத வளர்ச்சியில் இருந்த பங்கு பரிவர்த்தனை குறியீட்டு எண்  உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகளை அடுத்து 0.45 வீதமாக சரிவு நிலையை காட்டியதோடு 6542.99 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

உள்ளூராட்சி சபை தேர்தல் வரலாறு காணாத வகையில் கலப்பு முறையில் நடந்ததை அடுத்து அதன் தாக்கமானது நாட்டின் ஸ்திரத்தன்மையையே ஆட்டம் காண வைத்திருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும்.ஒரு சில  மனிதர்களின்  நிலையாமை என்ற போக்கினால் நாட்டின் அடித்தளமாக இருக்க கூடிய  அரசியல் ஆட்டம் கொண்டிருப்பது இலங்கையின் அரசியல் வரலாற்றுக்கு புதிதானது அல்ல எனினும் நாட்டின் வளர்ச்சிப்பாதையில் ஒரு முட்டுக்கட்டையாகவே இதனை கருதிட தோன்றுவது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

 

உங்கள் வாக்கு எதற்கு?


நீங்கள் செய்திகள் வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவது?

Posted by TamilFeed on Friday, May 18, 2018