உங்கள் வணிக வளர்ச்சிக்கு உதவும் தலைமைத்துவ யுக்திகள் 

உங்கள் வணிக வளர்ச்சிக்கு உதவும் தலைமைத்துவ யுக்திகள் 

கடின உழைப்பும் கடின தேர்வுமே உங்களின் நிறுவன போக்கினை முன்னேற்றும் .

19/02/2018 | Views 2825

வணிக நிறுவனமொன்றில் தலைமைத்துவம் என்பது பாரிய பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். நிறுவனத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதற்கு என்னதான் சிறந்த வளங்கள் காணப்பட்டாலும், சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் போனால் பின்னடைவுக்கே அது வழிவகுக்கும்.

சில முன்னணி வணிக முயற்சிகளை நாம் பார்த்தோமானால் அவர்களுக்கு கிடைக்க கூடிய வளங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். ஆனால் அவர்கள் தமது வணிக   செயல்பாட்டினை மிகவும் வெற்றிகரமாக முன்கொண்டு செல்வார்கள். இன்னுமொரு புறம் என்னதான் கிடைத்தற்கறிய வளங்கள் மிதமிஞ்சி அமைந்தாலும் ஒரு சில வணிக முயற்சிகள் பாதியிலேயே முடங்கி விடுகின்றன. இதற்கான காரணம் எதுவாக இருப்பினும் வெற்றிக்கும் தோல்விக்குமான வழிவகையினை நிர்ணயிப்பதில் தலைமைத்துவப்பண்பு என்பது பெரும் இடத்தினை பெறுகின்றது.

பெருவெளி நிறுவனங்களாகட்டும், சாதாரண கூட்டு முயற்சிகள் ஆகட்டும், வணிகம் சார்ந்த சூழலின் முக்கிய எதிர்பார்ப்பும், அடையவிருக்கும் இலக்குமானது இலாபகர வெற்றியே ஆகும். இதனை வினைத்திறனுடன் பெற்றுக்கொள்வதற்கு தலைமைத்துவ பண்பானது பெரும் உதவியினை புரிகின்றது. அதனை சரியான முறையில் அமைத்துக்கொள்வதில் தான் நமது திறமை உள்ளது.

வணிகத்தின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு உதவிடக்கூடிய தலைமைத்துவ பண்புகள் சில இங்கு குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் உங்களின் தொழிற்துறை வெற்றியானது உறுதிசெய்யப்படும் என்பதில் ஐயமில்லை.

  • தொழில் உறவை பேணுதல். 

தொழில்துறை ஆகட்டும், கூட்டு முயற்சிகள் ஆகட்டும் ஒரு விடயத்தினை அல்லது வியாபாரத்தினை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு சக முயற்சியாளர்கள், மற்றும் தொழிலாளர்களுடனான உறவானது நல்ல முறையில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் வணிக நிறுவனத்தின் செயற்பாடுகள், யுக்திகள் என்பன தொடர்பில் சக ஊழியர்கள் மற்றும் தொழில்புரிவோரின் நிலைப்பாடு தொடர்பில் அடிக்கடி கலந்தாலோசிக்க வேண்டும். அவர்களின் யோசனைகளை மற்றும் அறிவுரைகள் என்பன சிறந்த முறையில் அமையும் பட்சத்தில் அவற்றினை வரவேற்பதுடன் நிறை குறைகள் தொடர்பில் சக தொழில் உறவாளர்களின் ஆலோசனைகளை பெறுவது மட்டுமன்றி அவற்றினை சரியான முறையில் செயற்படுத்துவதில் உள்ளது நல்ல தலைமைத்துவத்தின் பண்பு .

  • மாற்றங்களை வரவேற்றல்.  

வணிக முயற்சிகளின் செயற்பாட்டினை இதுவரை காலமும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பின் கீழும்,பழமை யுக்திகளைக்கொண்டும் முன்கொண்டு சென்றிருக்கலாம். தொடந்து ஒரே கட்டமைப்பில் செயற்பாடுகள் இடம்பெற்றவண்ணம் இருக்குமானால் அது அனைவரின் மனதிலும் சளிப்பினை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமன்றி மாறிவரும் புதிய நுட்பவியல் உலகிற்கு ஏற்ப தம்மையும் மேம்படுத்திக்கொள்வதில் வணிக முயற்சிகளின் வெற்றி அடங்கியுள்ளது. சமூகவியல் ஊடகங்களில் விளம்பரம் செய்தல், வணிக முயற்சிகள் மற்றும் யுக்திகள்,செயற்பாடுகள் தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு நுட்பவியலை பயன்படுத்துவது விளைதிறனுடனான வினைத்திறனை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

அவ்வாறே தொழில் குழுக்கள், செயன்முறைகள்போன்றவற்றிலும் சிற்சில மாறுதல்களை கொண்டுவருவதன் மூலம் புதிய யுக்திகளும், வழிமுறைகளும் பெறப்படுகின்றன. சிறந்த தலைமைத்துவப்பண்பானது இவ்வாறான புதிய மாறுதல் முயற்சிகளுக்கு இடமளிப்பதுடன், அவ்வகை மாற்றங்களை அவதானித்து அதன் மூலமாக பெறப்படக்கூடிய பெறுபேறுகளை வெற்றிகரமாக செயற்படுத்துவதில் தங்கியுள்ளது.

  • தெளிவான முடிவுகளை துணிந்து எடுத்தல்.

தலைமைத்துவ பண்பின் மிகப்பெரிய சவாலாக இருப்பது முடிவுகளை எடுப்பது. சரியான சந்தர்ப்பத்தில் நாம் எடுக்க கூடிய தெளிவானதும், திறமையானதும் முடிவே வணிக வெற்றிக்கு அடித்தளமாக அமையும். பல முன்னணி தொழில் முயற்சிகள் முடிவுகளை எடுக்கும் விடயத்திலேயே பின்னடைவை கொண்டுள்ளது. அசாதாரண சூழ்நிலையானது உங்களின் வணிக முயற்சிக்கு ஏற்படும்போது அவற்றினை  எவ்வாறு கையாள்வது, அதனை எதிர்கொள்வது எப்படி என்ற பல்வேறுபட்ட யோசனைகள் முன் வைக்கப்பட்டாலும்,அவை அனைத்தும் நீங்கள் எடுக்க கூடிய சரியானதும், தெளிவானதுமான முடிவின் மூலமே வெற்றியினதும் தோல்வியினதும் பாதைக்கு இட்டுச்செல்லும். 

தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அதன் மூலமாக ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் முற்கூட்டியே ஆய்வினை கண்டிப்பாக மேற்கொண்டு வைத்திருத்தல் அவசியம். எட்டப்படும் தீர்மானம் பின்னராக சாதகமாகவா அல்லது பாதகமாகவா அமையும், வெற்றியினை ஏற்படுத்தக்கூடியதா அல்லது தோல்வியினை தரக்கூடியதா, இதனால் பாதிப்புக்கள் ஏற்படுமா போன்ற விடயங்களை முற்கூட்டியே ஆராய்ந்து கவனம் செலுத்திடல் அவசியம். இதுவே சிறந்த தலைமைத்துவ பண்பினை அமைத்துக்கொள்ள உதவிடும் மிகவும் முக்கிய கோட்பாடு ஆகும்.

நம்மை மெருகூட்டிக்கொள்வதற்கான முயற்சிகளை நாம் கடினமாக்கிக்கொள்ளும் போதே நமது திறமைகளும் பட்டை தீட்டப்படுகின்றது. சிறந்த வணிக நிறுவனமாக நம்மை உருமாற்றிக்கொள்வதற்கு கடின உழைப்பும், இடைவிடாத முயற்சிகளும் நம்மை சீர்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறே சிக்கல்களை எதிர்கொள்வது, சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதுமட்டுமல்ல சில வெளிப்புற காரணிகளையும் நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதில் சிறந்த தலைமைத்துவ பண்பானது வெளிப்படுகின்றது . எனவே நல்ல தலைமையானது அமையுமிடத்து வணிகத்துறையின் வெற்றியானது மேலும் உறுதி செய்யப்படும் என்பதை மீண்டும் உறுதிசெய்கிறது.