சீற்றமான தாக்குதல்களை காட்டும் சிரியாவின் போர் உபாயங்கள்

சீற்றமான தாக்குதல்களை காட்டும் சிரியாவின் போர் உபாயங்கள்

மனிதாபிமானமற்ற சிரியாவின் படுகொலைகள். உண்மை இலாபம் யாருக்கு?

27/02/2018 | Views 227

கடந்தவாரம் உலகையே கதிகலங்க வைத்த செயலாக பார்க்கப்படுவது சிரியாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற போரியல் தாக்குதல்கள் ஆகும். உலக நாடுகளின் கடும் கோபத்திற்கு உள்ளான சிரியாவின் போர் குற்றங்கள் உலக நாடுகளில் எங்கும் இல்லாதவாறு பாரிய மனித படுகொலை குவிப்பின் காரணியாக உள்ளமை ஏன் உலகளாவிய சமாதான அமைப்புக்களால் கண்டுகொள்ளப்படவில்லை என தெரியவில்லை

போர் நிறுத்தம் அறிவித்த பின்னரே தாக்குதல்களின் சீற்றம் அதிகரித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக தலைநகர் டமஸ்கஸுக்கு அருகிலுள்ள நகரில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். "எவ்வித தாமதமுமின்றி" என்ற உடனடி அறிவிப்பின் படியான 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட பிறகு வான் தாக்குதல் மட்டுமல்லாது, தரைத் தாக்குதலும் அதிகரித்துள்ளமை தான் ஒட்டுமொத்த உலகின் அதிருப்திக்கான காரணம் .

ரகசியமாக அரங்கேறும் இரசாயன  தாக்குதல்கள்  

டமாஸ்கஸிற்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சுமார் 3 இலட்சத்து 90 ஆயிரம் பொதுமக்கள் சிக்கியுள்ளதாக அறியப்படுகின்றது. அந்தப் பகுதிகளில் ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய இராணுவத்தினர் போரில் ஈடுபடுவதாக அறியப்படுகின்றது.

போர் நிறுத்த அறிவிப்புக்கள் கடுமையாக விடுக்கப்பட்ட போதிலும் அந்த பிரதேசங்களில் இரசாயன தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.  சிரிய வைத்தியசாலைகளில் போரினால் பாதிப்படைந்து காயமுற்று வரும் பல நோயாளர்களுக்கு இரசாயன தாக்குதலால் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் தென்படுவதாகவும் இரசாயன தாக்குதல் காரணமாக குழந்தைகள் சிலரும் உயிரிழந்து இருப்பதாக சிரிய அமெரிக்க மருத்துவ சங்கம் செய்தி வழங்கியுள்ளது. இதுதொடர்பான அறிக்கைகளை சுதந்திரமாக சரிபார்க்க முடியவில்லை. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என சிரிய அரசாங்கம் கூறி வருகிற போதிலும் அங்கிங்கு பாதுகாப்பு மற்றும் மருத்துவ கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் உலக நிறுவனங்கள் இவ்வாறான உள்ளக செய்திகளை கசிய விடவும் தவறுவதில்லை.

சிரிய  கிளர்ச்சியின் விதை தூவப்பட்டது எப்படி?

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அஷாதுக்கு எதிரான சமாதான கிளர்ச்சி எனும் விதையின் விஸ்வரூபம் 3 இலட்சத்துக்கும் மேலான பொது மக்களின் உயிர்ப்பலியாகும்.

* சிரியாவில் மிக நீண்டகாலமாக நிலவிவந்த வேலையின்மை பிரச்சினை, ஊழல், மற்றும் முடக்கப்பட்ட அரசியல் சுதந்திரம் என்பன காரணமாக 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது தந்தையாரான ஹபீசை வீழ்த்தி ஜனாதிபதியாக தம்மை நிலைநிறுத்தி கொண்டார் பஷார் அல் அஸாத். 

* அசாத்துக்கு எதிரான முதல் கிளர்ச்சியாக முஸ்லிம் மத சார்பு கிளர்ச்சியாளர்களின் மூலமான ஆர்ப்பாட்டங்கள் டேரா நகரில் வெடிக்க தொடங்கியது.

* உள்ளூர் கிளர்ச்சியாளர்களின் ஆயுத  போராட்டம் வலுபெறத்தொடங்கியதும் அதிபர் அசாத் வெளிநாட்டு ஆதரவுடனான பயங்கரவாதத்தினை கையிலெடுக்க தொடங்கினார். தம்மை பாதுகாத்துக்கொள்ள மற்றும் மாநில கட்டுப்பாடுகளை மீட்டெடுக்கவும் அசாத் உலக நாடுகளின் பயங்கரவாதத்தினை நாடினார்.

* நாளுக்கு நாள் வன்முறைகளின் வேகம் அதிகரிக்க அரசுக்கு எதிரான கிளர்ச்சி படைகளும் அதி தீவிரமாக வளர்ந்துவர தொடங்கியது.

* இந்த போர்க்களத்தின் பின்னூட்டமாக ஈரான்,சவூதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலையீடுகள் கிளர்ச்சியினை கிளறும்படி செய்தன. இந்நாடுகள் அரசுக்கும் , எதிர் படையணிக்கு மறைமுகமாக  இராணுவ மற்றும் அணு ஆயுத நிதி உதவிகளை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த வெளிநாட்டு சக்திகள் (நாடுகள்) பரந்த மதசார்பற்ற  அரசியல் சக்திகளை குழப்பும் விதமாக  பிரிவினைவாதத்தை வளர்க்கும் படி கிளர்ச்சிகளை தூண்டிட செய்தன. சன்னி முஸ்லிம்களின் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி தரப்பினர் ஜனாதிபதிக்கு எதிரான கிளர்ச்சிகளை மென்மேலும் மேற்கொண்டு வந்தனர்.

* இவ்வாறு ஜிகாத் குழுக்களும் தமது பங்கிற்கு தத்தமது பிரதேசங்களை கைப்பற்ற தொடங்கின. அல் கொய்தா அமைப்புடன் அல் - நுஸ்ரா கூட்டிணைந்து சிரியாவின்  மாகாணமான "இட்லிப்" பின் பெரும்பகுதிகளை கட்டுப்படுத்தி வருகின்றன.

* இவ்வாறே வட  சிரியாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்து வரும் ஐ .எஸ்  தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரச அமைப்பு (ISLAMIC STATE (IS)), சிரிய அரச படைகளை எதிர்ப்பதுடன் ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு வான்வழி தாக்குதல்களை எதிர்கொண்டது.

* தொடர் தோல்விகளை அடுத்து சிரிய  ஜனாதிபதி தமது பதவியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலான மாஸ்க்கோ பயணத்தினை மேற்கொண்டு, தாக்குதல்கள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிரானவை அன்றில் மக்களுக்கு எதிராக அல்ல என பெயரிட்டுக்கொள்ள முனைந்தார். 

* தொடர் தாக்குதல்களின் தீவிரம் கட்டுக்கடங்காமல் போகவே நல்லெண்ண நோக்கோடு ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புட்டின் தமது படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தார். எவ்வாறாயினும் சிரியா மீதான வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்ற வண்ணமே இருந்தும் வந்தன,

* ஜனாதிபதி அசாத் மீதான அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்கவே ஜிகாதி மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் வகையில் வான் வழி தாக்குதல்களை மட்டுமன்றி பாரிய இரசாயனதாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.
 

போரின் உண்மையான தாக்கம் எவ்வாறு அமைந்தது?.

கடந்த 2016 ஆம் ஆண்டுக்குள் இந்த போரின் காரணமாக நேரடியாகவும் மறைமுக தொற்றுக்கள் மற்றும் உடல் உபாதைகள் காரணமாகவும் சுமார் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களும், சிறுவர்கள் பல்லாயிரக்கணக்கானோரும் காவுகொள்ளப்பட்டமை அறியப்படுகின்றது. இதில்10% சிரிய மக்களே ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாகவும், மேலும் 6.3 மில்லியன் மக்கள் உள்ளக இடப்பெயர்வில் இடம் மாறியதாகவும் அறியப்படுகின்றது.

சிரியாவிலுள்ள 13.5 மில்லியன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் அதே வேலை அவற்றிற்கான மொத்த செலவாக $3.4 பில்லியன்அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது.

சிரியர்களில் 85% சதவீதமானோர் வறுமையில் உள்ள அதே வேலை மொத்த மக்கள் தொகையில் 2/3 பங்கினர் மோசமான வறுமை நிலையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறியப்படுகின்றது. அவ்வாறே 12.8 மில்லியன் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டி இருப்பதாகவும், சுமார் 7 மில்லியனுக்கு அதிகமான மக்கள் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் உணவுப்பற்றாக்குறை என்பனவற்றால் பாதிப்படைந்து இருப்பதாக அறியப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மையானோரின் உணவு தண்ணீராகவே உள்ளமை வருத்தமளிக்கும் செயல். அத்துடன் 1.75 மில்லியன் குழந்தைகள் பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றதாக அறியப்படுகின்றது.

போர் நிறுத்த அழுத்தங்கள் அவமதிக்கப்படுகின்றதா .

30 நாட்களுக்கு போர் நிறுத்தம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என்ற பல்வேறுவிதமான வடிவங்களில் அரசியல் தலைவர்கள் அழுத்தம் கொடுக்கும் வகையிலான அறிவிப்புக்களை விடுக்க தவறுவது இல்லை.

முன்னதாக "எவ்வித தாமதமுமின்றி" 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்தி, அதனை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.

மக்கள் தப்பி செல்வதற்கான பாதைகளை அமைக்க சிரியா செம்பிறைச் சங்கம் உதவும் எனவும் மக்களுக்கு இது குறித்த தகவல்கள் துண்டுச் சீட்டுகள் மூலமாகவும், குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்கள் மூலமாகவும் செய்திகள் அனுப்பப்படும் என்றும், பொதுமக்கள் வெளியேறுவதற்கான "மனிதாபிமான பாதைகள்" உருவாக்கப்படும் என்றும்  சிரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது வெறுமனே கண்துடைப்பு செயலாகவேயுள்ளது. ஆனால் சண்டையிட்டு வரும் அனைத்து தரப்பினரும் ஐ.நாவின் போர் நிறுத்த தீர்மானத்தை எவ்வாறு அமுல்படுத்துவது என்பதை ஒப்புக்கொண்டால் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்படும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோஃப் ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பது உண்மையில் அதிருப்தியான நிலையாகும்.

உலக நாடுகளை புறக்கணிக்கின்றதா சிரியா ?

தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை சிரியா அரசாங்கம் மதித்து செயல்படுமாறு வலியுறுத்த வேண்டுமென்று ரஷ்யாவிடம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியது அறிந்ததே. அவ்வாறே ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவ வேண்டுமென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் கேட்டுக்கொண்டுள்ளமை அறியப்படுகின்றது.

தொடர்ச்சியாக போர் நடைபெற்றுவரும் சிரியாவில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்ட 30 நாள் போர் நிறுத்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்பு அவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் ஜிகாதி குழுக்கள் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ட்ந்தும் போர் நடவடிக்கைகளில்  மட்டுமன்றி சிறுவர்கள் குழந்தைகள் என்ற பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்குவது கவலைக்குரிய விடயம் ஆகும்.