உறவுகளை தேடுவோரின்  உணர்வுகளை மதிப்போம் 

உறவுகளை தேடுவோரின்  உணர்வுகளை மதிப்போம் 

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைப்பாடுகள் குறித்து இன்னமும் தீர்வு எட்டப்படாதது ஏன்?

09/03/2018 | Views 763

கடந்த காலங்களில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த நிலைகளின் போது  காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்திச்செல்லப்பட்டோர் தொடர்பில் இதுவரையும் சரியான தீர்வு நிலைகள் எட்டப்படவில்லை என்பதனை வலியுறுத்தாதோர் யாரும் இல்லை.

யுத்தநிலை தணிந்து நாட்டில் அமைதி நிலவும் காலமாக இந்த காலம் கணிக்கப்பட்டாலும், யுத்த காலத்தில் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பில் இன்னமும் எதுவித தகவல்களும் கிடைக்கப்படாமல் இருப்பது மக்களின் அதிருப்தியை சம்பாதித்து உள்ளது.

போரினால் உடல் உபாதைகள், இடப்பெயர்வு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களை தவிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டும் இருப்பது அறியக்கூடியதாக உள்ளது. இவர்களை மீண்டும் கண்டுபிடித்து தருமாறு சம்பந்தப்பட்டார்களின் உறவினர்கள் எத்தனையோ போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் இதுவரை சரியான தீர்வு எட்டப்படவில்லை.

வருடங்களாக தொடரும் போராட்டம்.

கடந்த வருடமளவில் காணாமல் போனோர் தொடர்பில் அமைச்சும், ஆலோசனை சபைகளும் இந்த அரசாங்கத்தின் மூலம் நிறுவப்பட்டது மட்டுமன்றி அண்மையில் பாராளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சிறப்பான சட்ட மூலம் ஒன்று திருத்தங்கள் இன்றி அமல்படுத்தப்பட்டது. 

இது ஒரு புறமிருக்க காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எதுவித சரியான முடிவுகளும் கிடைக்கப்படாததன் காரணமாக  உறவினர்கள் தொடர்ந்தும் ஒரு வருடங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த வண்ணமே இருப்பது அறியப்படுகின்றது.

இலங்கையின் பல்வேறுபட்ட மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி கூடாரமமைத்து ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் ஓராண்டுகளை கடந்த நிலையினை காணலாம்.

கடந்த காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டும்,  யுத்த காலப்பகுதியில் யுத்தப்பிரதேசங்களில் விசேடமாக யுத்தம் முடிவடைந்து இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும்  தம்மிடம் மீண்டும் மீட்டுத்தருமாறு கோரி பல்வேறுபட்ட இடங்களிலும் போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

தமது பிள்ளைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற முடிவு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடருமென போராட்டத்தினை மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை நாட்டின் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில் சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என மக்கள் விசனம் தெரிவித்திருப்பதாக அறியப்படுகின்றது.

இந்நிலையில் இன்று தமது போரடடத்துக்கான தீர்வினை சர்வதேசமே தர வேண்டும் எனவும் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் தமக்கான ஒரு உறுதியான தீர்வு பெற்றுத்தரப்படவேண்டும் எனவும் ஜெனீவாவுக்கான மகஜர் ஒன்றும் இதன்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

குறிப்பாக அவசரகால நிலை பிரகடனப்படுத்துள்ளப்பட்டுள்ள இந்த நிலையில் மிகவும் அமைதியான முறையில் போராட்டங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசின் இழுபறி நிலைக்கு காரணங்கள் யாதாக இருக்கலாம்?

நாடு முழுவதிலும் இருந்து பல்வேறுபட்ட ரீதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு இன்றுவரை அவர்களின் நிலைப்பாடு என்னவென்றே தெரியாத வகையில் உள்ளமை அறியப்படக்கூடியதாக இருக்கின்றது. இதில் பெரும்பாலும் இளைஞர் யுவதிகள் உள்ளடங்குவதாக அறியப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார், சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், வட கிழக்கின் 8 மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு மக்களுக்கான தீர்வை வலியுறுத்தி போராடிவருகின்றதாக  அறியப்படுகின்றது. எவ்வாறாயினும்  உறவினர்கள் பகிரங்க அழைப்பு விடுத்தும் இதுவரை அரசியல் பிரமுகர்கள் எவரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது அறியப்படும் உண்மை ஆகும்.  

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையில் சரியான முடிவுகளை மேற்கொள்ள முடியாமைக்கு வெறுமனே அரசாங்கத்தையும், அரச தரப்பினரையும் மட்டும் குறை கூறிவிட முடியாது என்றே கூற வேண்டும்.

யுத்த காலப்பகுதியில் நாட்டின் பல்வேறுபட்ட மக்கள் இடம்பெயர்ந்தும், வெளிநாடுகளுக்கு படகு மற்றும் விமானங்கள் மூலம் சட்ட விரோதமாக தப்பிச்சென்றும் இருப்பது அறியப்படுகின்றது . இவ்வகையில் நாட்டை விட்டு வெளியேறியோர் தொடர்பில் இன்றுவரையில் சரியான தகவல்கள் பெறப்படவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

வெள்ளை வேன்களில் கப்பம்கோரி கடத்தப்பட்டவர்கள் நிலை மற்றும் யுத்தத்தின் பின்னர் அரசாங்க தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டோர் நிலையும் இவ்வாறே உள்ளது. இவர்கள் பற்றிய எதுவித தகவல்களும் பெறப்படாமலேயே உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட நபர் உண்மையில் எவ்வாறு காணாமல் போனார்? இவர் உயிருடன் இருக்கின்றாரா? இப்போதைய இவரின் நிலைப்பாடு தான் என்ன என்பது தொடர்பில் ஒரு துளி தகவலெனும் அறியாத வண்ணம் அவர்களது உறவினர்கள் இன்னமும் போராடி வருவது கவலைக்கிடமான விடயமே.

ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனம் 

இலங்கையில் இடம்பெற்ற  போர் குற்றங்கள் குறித்து ஆராய்ந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களில் இலங்கை அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தமது கண்டனத்தினை வெளிப்படுத்தியும் இருப்பது அறியப்படுகின்றது.

இலங்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நிலை, நீதி கிடைப்பதற்காக மேற்கொள்ளப்படும் மந்தகதியிலான நடவடிக்கை மற்றும் முந்தைய குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் குறித்து ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமை ஆகிய காரணங்களால் தடம் புரளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்த காலகட்டத்தில், அரசு ஏற்படுத்திய கட்டமைப்புக்கள் மற்றும் நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றம் ஏற்படுவதற்கு போதுமானதாக இல்லை என்று ஐ.நா வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு நடந்த குற்றச் செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு, நீதியையும், நல்லிணக்கத்தையும் ஒருங்கே கொண்டு செல்ல வேண்டிய கடமை அரசுக்கும் மக்களுக்கும் இருப்பதையும், அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் ஐ.நா சபையின் ஆணையர் சையத் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறே, நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு பிரசாரம் செய்ய ஆலோசனை செயலாக்கக் குழுக்களை அமைத்தல், இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணைய அலுவலகம் ஏற்படுத்துதல், ராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியார் நிலங்களை விடுவித்தல், சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்றங்கள் அமைத்தல் உள்பட பல்வேறு விதமான  பரிந்துரைகளை முன்வைப்பதாகவும் அவர் மேலும் அறியத்தந்தார்.

அரசாங்கத்தின்  செயற்பாடுகள். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலம் ஒன்றினை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்து உள்ளது. இதற்கான தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியான சாலிய பீரிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், மேலும் 7 பேரை அதன் ஏனைய உறுப்பினர்களாகவும் அறிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை செய்தவண்ணம் இருப்பது அறியப்படும் உண்மை. அந்த வகையில் இவர்களை தேடும் பணிகளுக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக பணிகளுக்கென 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1.3 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு அதிருப்தி அளிக்கும் ஏமாற்றகரமான அறிவிப்பாகவே கருதப்படுவதாக உணரப்படுகின்றது.

கட்சிகளின் நிலைப்பாடு.

காணாமல்போன ஆட்களின் குடும்ப உறவினர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தமது உத்தியோகபூர்வ இணையத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கம் தம்மிடம் உள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அவரது இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

எவ்வாறாயினும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தீர்வு தொடர்பில் பல்வேறு சமூகத்தினரும் தமது கருத்துகூறல்களை பதிவுசெய்து வந்த போதிலும், இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கட்டாயமாக வலியுறுத்தி அழைப்பு விடுத்த போதிலும் எந்தவொரு அரசியல் பிரமுகரும் கலந்துகொள்ளவில்லை என்பது சுட்டிக்காட்டப்படவேண்டியிருப்பது அவர்களின் மீதான அதிருப்தி நிலையினை அதிகப்படுத்தியுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான உணர்வுபூர்வமான போராட்டத்தில் பலவருடங்களாக தீர்வு கிடைக்காமலேயே இன்னமும் பலர் போராடிவருவது அனைத்து தரப்பினருக்கும் மிகவும் வேதனையான விடயமே. உறவுகளை தொலைத்தவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடப்பதை நாட்டின் அரசாங்கமானது பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ளதை இங்கனம் வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு பிரஜைக்குமான கடப்பாடு