கனடாவை உலுக்கிய ஆணவக்கொலை.

கனடாவை உலுக்கிய ஆணவக்கொலை.

தமது பெண் பிள்ளைகளை தாமே கொன்ற தாய் கூறுவது என்ன?

19/03/2018 | Views 289

உலக நாடுகளில் மக்களின் வாழ்க்கைமுறையில் கட்டமைப்பிலும் முன்னிலையில் இருக்கும் நாடாக கருதப்படும் நாடுகளில் முக்கிய இடத்தை கனடா பெற தவறுவதில்லை. குடியேற்றவாத நாடு என்கின்ற போதிலும் சகல மக்களுக்கும் சமமான முறையில் அனைத்து சலுகைகளையும் பெற்று கொடுப்பதில் தனி கவனம் கொண்ட நாடு என்பதில் மறுப்பு ஏதும் இல்லை.

கீழைத்தேய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்னமும் நிலவி வரும் கலாச்சார பின்பற்றுதல்கள் மற்றும் மதச்சார்பு கொள்கைகள் போன்ற கனடாவில் வசிக்கும் அந்தந்த நாடுகளின் குடியேறிகளை விட்டு வைக்க வில்லை என்றே கூற வேண்டும். என்னதான் மேலைத்தேய கலாச்சாரத்தில் மூழ்கிய நாடு என்ற போதிலும் தமது பூர்வீக கலாச்சாரத்தினை இன்னமும் அங்குள்ள மக்கள் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜாதி மதம் என்று ஊறிப்போன நிலையில் சில முஸ்லீம் நாடுகளும் இந்திய நாட்டையும் நாம் குறைகூறி வந்திருந்தோம் என்றாலும், ஏதிலிகளாக வெளிநாட்டுக்கு சென்றிருந்தாலும் ஆணவ கொலைகளை கூட இவர்கள் விட்டு வைக்காமல் பின்பற்றி வருகின்றமை மிகவும் வேதனை அளிப்பதாகவும் ஆச்சர்யப்படக்கூடியதாகவும் உள்ளது.

கனடாவை உலுக்கிய 4 பெண்களின் மரணம். 

கடந்த 2009 ஆம் ஆண்டு கனடா ஒண்டாரியோ மாகாண கிங்ஸ்டன் கால்வாயில் நீரில் மூழ்கிய நிலையிலான நிசான் சென்ட்றா ரக கருப்பு நிற காரில் இருந்து 4 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக ஒண்டாரியோ நகர காவல் துறையினர் அறிவித்தனர். விசாரணைகளை மேற்கொண்டதில் மொஹமட் ஷாபியா என்பவருக்கு சொந்தமான அந்த வாகனத்தில் ஷாபியாவின் முதல் மனைவி ரோனா மொஹமட், மற்றும் 3 பெண் பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டமை அறிந்ததே.

மேற்படி நால்வரும் காணாமல் போய் இருந்ததாக முன்னமே ஷாபியா மற்றும் அவரது இரண்டாவது மனைவி டோபா யஹியா ஆகியோர் காவல் துறையிடம் புகார் அளித்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனினும் இந்த மரணங்கள் தொடர்பான விசாரணையினை காவல் துறையினர் பல கோணங்களில் விசாரித்தனர்.

ஷாபியா குடும்ப பின்னணி.

ஆபிகானிஸ்தான் நாட்டவரான முகம்மது ஷாபியா1992 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்து டுபாயில் குடியேறியுள்ளார் பின்னர் அங்கு நிலமனை வர்த்தகத்தில் ஈடுபட்ட இவர்கள் கனடாவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். 

1980 ஆம் ஆண்டளவில் கனடிய குடியுரிமை பெற்றவரான ரோனாவை மணமுடித்த ஷாபியா, பல வருடங்களாக ரோனாவுக்கு குழந்தைகள் இன்றிய காரணத்தினால், பலதார திருமண முறையின் கீழ் 1989 ஆம் ஆண்டு டோபா யஹியாவை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.

கணவரை விவாகரத்து செய்யாத நிலையில் ஷாபியாவின் முதல் மனைவி ரோனா மிகவும் துன்பங்களை அனுபவித்ததாக அறியப்படுகின்றது. விசாரணையின் போது ரோனாவின் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலத்தின் படி ஷாபியாவின் இரண்டாவது மனைவி டோபா, ரோனாவை  வேலைக்காரியை போல் நடத்தியதாக அறியப்படுகின்றது. விருந்தினர் விசாவின் மூலமாக கனடாவுக்கு வந்த டோபா, சாபியாவுடனான திருமணத்தின் பின் இன்னமும் கனடிய குடியுரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என அறியப்படுகின்றது

கொலைகளும் காரணங்களும்.

ஷாபியாவின் 17 வயதான மக்கள் ஸெய்னப், பாகிஸ்தானிய இளைஞர் ஒருவரை காதலித்ததாக அறியப்படுகின்றது. இவர்கள் வேறு முஸ்லீம் பிரிவினை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் ஷாபியா இவர்களது காதலை ஏற்கவில்லை என்று தெரிகின்றது.

இதன் பின்னர் ஷாபியாவின் மகள்களான செய்னப், சாகர் மற்றும் கீத்தி ஆகியோர் தமது முதல் மனைவியுடன் சேர்ந்து கொல்லப்பட்டதாக அறியப்படுகின்றது.

மரணம் தொடர்பான விசாரணை.

முன்னதாக தமது முதல் மனைவியும் மூன்று மகள்களும் சென்ற வாகனத்தை காணவில்லை என்று காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்த ஷாபியா, கிங்ஸ்டன் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தமது முதல் மனைவி மற்றும் பெண் பிள்ளைகளினதுமாகும் என உறுதிப்படுத்தி இருந்தார்.

சந்தேகத்தின் பேரில் மரண விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் ஷாபியிடம் இருந்த வாகன விபரங்களை பரிசோதித்தனர். அவருக்கு சொந்தமான வாகனம் ஒன்று இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நிசான்சென்ட்றா ரக வாகனத்தினை சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக கொள்முதல் செய்ததாக காவல்துறையினர் கண்டறிந்தனர்,

மேலும் விசாரித்ததன் பின்னர் ஷாபியின் இரண்டாவது  மனைவி டோபா அவளது மூன்று பெண்குழந்தைகள் மற்றும் ஷாபியாவின் முதல் மனைவியை "ஆணவ கொலை" புரிந்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த கணவர் ஷாபியா மற்றும் அவளது மூத்த மகன் ஹமீத் ஷாபியா ஆகியோர் கைதுசெய்யப்பட்டதாக அறியப்படுகின்றது.

விசாரணைகளின் முடிவுக்கு பின்னர் 2012 ஆம் ஆண்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 25 வருடங்கள் பெரோலில் வர முடியாத வகையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை அடுத்து ஷாபியாவின் மேலும் 3 குழந்தைகள் சமூகநல பராமரிப்பகத்தினரால் வளர்க்கப்பட்டு வருகின்றதாக அறியப்படுகின்றது.

இன்னமும் கனடிய குடியுரிமை பெறப்படாத நிலையில் டோபாவை நாடு கடத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து டோபாவின் தரப்பு வழக்குரைஞர்கள் மேன் முறையீடு செய்ததை நிராகரிக்குமாறு கனேடிய எல்லைகள் பாதுகாப்பு நிறுவனத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அறியப்படுகின்றது.  

தொடரும் ஆணவ கொலைகள். 

அண்மையில் இது போன்றதொரு சம்பவமாக ஊடகங்களில் பேசப்பட்டது இந்திய தமிழகத்தில் இடம்பெற்ற சங்கர் - கௌசல்யா திருமணமும், சங்கரின் ஆணவக்கொலையும் ஆகும். கௌசல்யாவின் தந்தையரால் தமது கணவர் சங்கர் கொல்லப்பட்டதை அடுத்து அவரது தந்தைக்கு எதிராகவே சாட்சியமளித்தத்துடன் தந்தைக்கு மரணதண்டனையினை பெற்றுக்கொடுக்கவும் செய்தமை சுட்டிக்காட்டப்படவேண்டும்.

கலாசார பின்னடைவு மற்றும் தொடரும் இனவெறி என்பனவற்றால் ஆணவ கொலைகள் கீழைத்தேய நாடுகளில் சாதாரணமான விடயம் என்ற போதிலும், அதன் தாக்கம் மேலைத்தேய நாடுகளிலும் தொடரப்படுவது வியப்பளித்தது. எவ்வாறாயினு தாயொருவரால் கொல்லப்பட்ட இந்த 3 இளம் பெண் பிள்ளைகள்குறித்து மிகவும் வேதனை அளிக்கும் விடயமாகவே அனைவரும் பார்க்கின்றனர். மனிதனது வாழ்வியல் முன்னேற்றம் என்னதான் மேம்பட்டு இருந்தாலும் இவ்வகையான கீழ்த்தரமான பிற்போக்குவாதம் மிருகத்தனமான செயல் என்பதை குறிப்பிடாதவர்கள் யாருமில்லை