இலங்கை விவகாரத்தில் அடிபிடி களமானது  ஐ.நா 

இலங்கை விவகாரத்தில் அடிபிடி களமானது  ஐ.நா 

ஐ.நா கூட்டத்தொடரில் விவாதத்தின் போது  ஏற்பட்ட வாய்தர்க்கமும் போராட்டங்களும்.  

21/03/2018 | Views 274

தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் தொடர்பான கால மீளாய்வு மாநாடு இடம்பெற்றுவருவது அறிந்ததே. இதில் இந்த வாரங்களில் இலங்கை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் நடவடிக்கை தொடர்பிலும் அண்மையில் இடம்பெற்ற இனவாத கலவரங்கள் தொடர்பிலும் இந்த விவாதத்தில் பேசப்பட்டதாக அறியப்படுகின்றது.

கூட்டத்தின் போதான போராட்டம். 

ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் பேசப்படும் தருணத்தில் திட்டமிட்ட வகையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளை கண்டித்தும், உரிய நீதி கோரியும், சிங்கள அரசுக்கு எதிராகவும் புலம்பெயந்து வாழும் முஸ்லிம்களால் ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் பொருட்டு இலங்கையில்  அமைச்சர் பைசர் முஸ்தபா ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டமையும் அறியப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற்று வருகின்ற தருணத்தில் இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டால் அது தமக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என இலங்கை அரசாங்கம் நினைத்திருப்பதாக அறியப்படுகின்றது. இதன்காரணமாக, முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதாகவும், முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பதற்காகவும் அமைச்சர் பைசர் முஸ்தபாவை ஜெனிவாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவுக்கு சென்ற அமைச்சர் பைசர், அம்பாறை மற்றும் கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த பிரமுகர்களுடன் பேச்சு நடத்தினார். இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் அமைதி நிலவுவதாகவும், அனைத்து பிரச்சினைகளும் சுமுகமாக முடிந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருப்பதாக அறியப்படுகின்றது.

அதனை மீறி போராட்டம் நடத்தினால் அது பெரும் குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடும் என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டினார். எனினும், கவனயீர்ப்பு ஏற்பாட்டாளர்கள் இந்த பேச்சுக்களுக்கு இணங்க மறுத்துவிட்ட நிலையில், திட்டமிட்ட அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்ததுடன் அதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநாவில் இடம்பெற்ற வாய்தர்க்கமும் குற்றச்சாட்டும். 

இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.நா. உபகுழு கூட்டத்தின் போது இலங்கை தரப்பினருக்கும் ஐ. நாவின் தரப்பினருக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக  அறியப்படுகின்றது.

மேற்படி உபகுழு கூட்டத்தின் போது தமிழ் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான சிக்கலை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கருத்துக்கள் ஐ.நா தரப்பினரால் முன்வைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.

ஆயினும் இதன் போது சிங்கள மக்களும் பாதிக்கப்பட்ட நிலையினை மறந்து ஏன் என இலங்கை தரப்பில் உள்ளவர்கள் குரல் எழுப்ப தொடங்கியதாக அறிகின்றது. இந்த நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாய் தர்க்கம் வலுப்பெற்றமை அறியப்படும் உண்மை ஆகும்.

எவ்வாறாயினும் கர்ப்பிணி பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்தார்கள். பிறந்த குழந்தைகளை கொலை செய்தார்கள். பஸ்கள் மீது வெடி குண்டுத் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கான ஆதாரங்களை பார்க்க விரும்பினால் உங்களுக்கு நான் தருகின்றேன் என ஒரு தரப்பினரும், அதற்கு எதிராக இது இனவாதம் இல்லை. சிங்கள மக்களும் மனிதர்களே. அவர்களுக்கும் உரிமை உண்டு. தமிழ் மக்களுக்கு ஆதரவாக மாத்திரம் செயற்பட வேண்டாம் எனவும் மறு  தரப்பினரும் வாதிட்டமை காணக்கூடியதாக இருந்தது.

வாய் தர்க்கம் அதிகரித்து செல்லவே, இரு தரப்பினரும் தீவிரவாதிகள் என ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி சண்டையிட்டு கொண்டமையை அங்கிருந்து பெறப்பட்ட விவாத காணொளியில் மூலம் ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைகள் நிறைவேற்றப்படுமா?.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட மீளாய்வு அறிக்கையில் 253 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் 177 பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளதுடன், சுயவிருப்பத்துடன் 17 உறுதி மொழிகளையும் இலங்கை வழங்கி இருந்தது.. 

இலங்கை தொடர்பான குறித்த மீளாய்வு அறிக்கைக்கு பலமான ஒத்துழைப்பு வழங்குவதாக, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஐ.நா  அமர்வில் குறிபிட்டிருப்பதாக அறியப்படுகின்றது. நவம்பர் மாதத்தில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்ததாக  அறியப்படுகின்றது.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை உருவாக்குதல், காணாமற்போனோர் அலுவலகம் ஸ்தாபித்தல், சிறுவர் உரிமைகள் சம்பந்தமான உடன்பாட்டை நடைமுறைப்படுத்துதல் உட்பட மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகள் சம்பந்தமாக ரவிநாத் ஆரியசிங்க தனது உரையில் விவரித்து இருப்பதாக அறியப்படுகின்றது.

இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படுமா?. 

கண்டியில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும், இலங்கை சம்பந்தமாக புதுப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றின் எழுத்து மூலப் பிரதியும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையால் சமர்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அல் ஹுஸைன் தமது நிலைப்பாடு தொடர்பில் கருத்தினை முன்வைத்து பேசி இருந்தார். இதன்போது இலங்கை அரசாங்கமானது மந்த கதியில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தமை அறியப்படுகின்றது.

இதன் பின்னர் அவரது எழுத்துமூல உத்தியோகபூர்வ அறிக்கையொன்று சமர்பிக்கப்படவிருப்பதாக முன்னர் அறிவித்ததின் படி தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாய மீது ஜெனீவாவில்  குற்றச்சாட்டு. 

கப்பம் பெரும் நோக்கில் முன்னாள் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது. ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா கூட்டத்தொடரின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான அமர்வின்போதே  இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பது அறியப்படுகின்றது.

கப்பம் பெரும் நோக்கில் 2008 ஆம் ஆண்டு ஜெகன் தியாகராஜா உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி ஜெனீவா அமர்வில் சாட்சியமளித்து  இருப்பதாக ஊடக தகவல்கல் அறியப்படுகின்றன.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கப்படாத நிலையில் மேற்படி நபர்களை நாம்காணும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவேண்டும் என இதன்போது கேட்டுக்கொள்ளப்படுவதாக அறியப்படுகின்றது.

அவ்வாறே கோத்தபாய உள்ளிட்ட சில இராணுவ அதிகாரிகள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரிவிக்கப்படுகின்றது. 

ஐ.நாவின் நிலைப்பாடு பக்கசார்பானதா?.

இலங்கை அரசியல் விவகாரம் குறிந்தது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை பக்க சார்பாக நடந்துகொள்வதாக ஒரு சிலரால் விசனம் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இனக்கலவரங்களின் போது தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் பாதிப்படைந்தமை சுட்டிக்காட்டப்படும் அதே நேரம், இதன்போது சிங்களவர் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என நேற்று இடம்பெற்ற விவாதத்தில் வாதிடபட்டமை அறிந்ததே.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு இலங்கை விவகாரம் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் மக்களுக்கு நேர்ந்த அவலநிலைகள் தீர்க்கப்பட்டு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே பொதுவான மையக்கருத்தாக அனைவராலும் கூறப்படுவது. ஆயினும் இடம்பெற்றுவரும் அனைத்து கூட்டங்கள் மற்றும் பக்க மாநாடுகள் என்பனவற்றில் பக்க சார்பாக மட்டும் கருத்துரைக்கப்படுவதாக இலங்கை  அரசாங்க தரப்பில் விசனிக்கப்படுவது அறியப்படக்கூடியதாகவே உள்ளது.