சமூகவலைத்தளங்களில் இலகுவாக பணம் சம்பாதிக்கலாம்

சமூகவலைத்தளங்களில் இலகுவாக பணம் சம்பாதிக்கலாம்

உங்கள் வியாபார ஊடகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த 5 எளிய யுக்திகள் 

30/03/2018 | Views 32407

எமது அன்றாட வாழ்வியலில் ஒன்றித்துவிட்டன இந்த சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள். எமது அவ்வப்போதான நடவடிக்கைகளை மீட்டிக்கொள்ளவும், ஆவணப்படுத்தவுமென இப்போது நாம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றோம் என்பது மறுக்க முடியாத உண்மை .

உணர்வுபூர்வ ரீதியில் நமக்குள் ஒன்றித்துவிட்டது இந்த சமூக வலைத்தளங்கள் என கூறவேண்டும். அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் தொடர்பில் அறிந்துகொள்ள நாம் இந்த சமூக வலைத்தளங்களை முக்கிய ஊடகமாக பயன்படுத்தி வருவதால் பல்வேறு சாதக, பாதக விளைவுகளை காணக்கூடியதாக இருக்கின்றது.

உணர்வு ஊடகத்தினை உழைக்கும் ஊடகமாக மாற்றலாமா?

மனித உணர்வுடன் ஒன்றித்து விட்ட இந்த சமூக வலைத்தளங்களை கொண்டு பல்வேறு விடயங்களை பற்பலரும் நிகழ்த்தி வந்தவண்ணம் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் எமது வணிக மற்றும் வியாபார விடயங்கள் தொடர்பில் பயன்படுத்தி இலாபம் பெற்றுக்கொள்ளலாம் , அல்லது பணம் சம்பாதிக்கலாம் என்றால் யார்தான் விரும்ப மாட்டார்கள்?

பணம் ஈட்டுவது தொடர்பில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆயினும், சில யுக்திகள் மற்றும் நுணுக்கமான விடயங்களை பயன்படுத்தி இந்த சமூக ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்தல், மற்றும் சந்தை சூழலினை உருவாக்குவதன் மூலம் இலகுவாக பணம் சம்பாதிக்கலாம் என அறியப்படுகின்றது.

அவ்வாறு நமக்கு பிடித்தமான சமூக வலைத்தளங்களைக்கொண்டே நாம் இலகுவில் பணம் சம்பாதிக்க கூடிய சில நுணுக்கமான யோசனைகளை இங்கு காணலாம் .

 geotag பயன்படுத்தி விளம்பரம் செய்யுங்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு உணவு தயாரிப்பாளர் என்று வைத்துக்கொள்ளுவோம். அன்றாடம் காலை உணவாக நீங்கள் தேனீர் தயாரித்து விற்பனை செய்ய விரும்புகின்றீர்கள். எனவே நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்.

நீங்கள் தயாரித்த தேநீர் குடுவையை படம்பிடித்து INSTAGRAM , FACEBOOK  மற்றும் TWEETER வலைத்தளங்கள் மூலம் பதிவேற்றுங்கள். அதன்போது இந்த சுவைத்தரும் தேநீரை எங்கு, எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்பன தொடர்பில் (முடிந்தால் அதற்கான பெறுமதியினையும் குறிப்பிட்டு) பதிவிடும் அதே நேரம் geotag குறியீடுகளை பயன்படுத்தி சில புத்துணர்வு வாசகங்களை கூட சேர்த்து பதிவேற்றி பாருங்கள். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் பொழுது பார்ப்பவர்கள் கண்டிப்பாக ஈர்க்கப்படுவார்கள். அதன் பின்னர் உங்களை தேடி வரவும் செய்வார்கள் .

எப்போதும் செயற்படுங்கள். 

வியாபாரம் தொடர்பில் நீங்கள் தனியான கணக்குகளை ஆரம்பித்து வைத்துக்கொள்ளுங்கள் . அவற்றினை உடனுக்குடன் புதுப்பித்துக்கொள்வதுடன் படங்கள், பதிவுகளை அவ்வப்போது செய்துகொள்ள தவற வேண்டாம் . விலை மாற்றங்கள், சலுகை விலைகள், புதிய பொருட்களுக்கான அறிமுகம் போன்றவற்றை அவ்வப்போது பதிவிடுவதை கண்டிப்பாக மேற்கொள்ள தவறிட வேண்டாம். 

அவ்வாறே வாடிக்கையாளர் உங்களை தொடர்புகொள்ள இலகுவாகும் வகையில் நீங்கள் இயங்கும் நேரத்தை உங்கள் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுக்கொள்ள தவறாதீர்கள்.

தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களை அணுக நினைக்கும் வாடிக்கையாளருக்கு சரியானதும் தெளிவானதுமான தரவுகளை எப்பொழுதும் வழங்க மறுக்காதீர்கள். ஏதேனும் மாற்றங்கள் தொடர்பில் வாடிக்கையாளர் முறைப்பாடுகளை செய்ய நேர்ந்தால் கண்டிப்பாக செவிமடுங்கள்.

அவ்வாறே அடிக்கடி வாடிக்கையாளர் திருப்திநிலை, மற்றும் கருத்து கேட்கும் மதிப்பீட்டு கேள்விகள், மற்றும் மதிப்பிடல் செயலிகளை பயன்படுத்தி அவர்களின் விருப்பு வெறுப்புக்களை தொடர்ந்தும் அவதானிக்க தவற வேண்டாம். இது உங்கள் விற்பனையினை மேம்படுத்த சிறந்த யுக்தி.

இல்லை என்று சொல்லுங்கள். 

நீங்கள் பதிவேற்றிய பொருளின் இருப்பு உங்களிடம் இல்லாதுபோனால் அது தொடர்பில் மாற்றுப்பதிவினை அல்லது இல்லை, மீண்டும் எப்போதுவரும் என்ற விடயங்களை கண்டிப்பாக குறிப்பிட தவறவேண்டாம். இவ்வாறு இல்லை என்பதை குறிப்பிடுதல் என்பதுவும் வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்க்கும். 

வாடிக்கையாளர் தேடும் பொருள் தொடர்பில் இல்லை என்று கூறுவது அவரது விருப்பத்தேர்வினை மறுதலிப்பதாக கருதப்படுகின்றது. இதனால் அவர் எமது இடத்தைவிட்டு இலகுவில் சென்றுவிடுவார். இதுதான் இதுவரைகாலமும் வியாபார நுணுக்கங்களில் காணப்பட்ட பெரும்பிரச்சினை ஆகும். இல்லை என்று மட்டும் சொல்லி விடுவது அவரது மனநிலையை பாதிக்கும் என அறிவோம்.

இந்த நிலையினை மாற்றிக்கொள்ள இந்த யுக்தியினை பயன்படுத்துங்கள். அதாவது நீங்கள் ஒரு ஆடை அலங்கார விற்பனையாளர் என வைத்துக்கொள்வோம். உங்களிடம் ஒருவகை ஆடை விற்பனையில் இருந்தது. அதன் இருப்பானது விற்று தீர்ந்துவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஆடை தொடர்பான பதிவுகள் உங்களிடம் இருந்தால் அதன் அருகில் "இருப்பு இல்லை" என்பதை குறிப்பிடுங்கள். அவ்வாறு அந்த ஆடை மறுபடியும் உங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தொடர்பில் பதிவில் குறிப்பிடுவதுடன். அதற்கு மாற்றீடாக அதே விலை, மற்றும் ரகத்திலான இன்னுமொரு ஆடையை பரிந்துரைப்பதாக பதிவில் இணையுங்கள். இந்த முறைமையானது வாடிக்கையாளரை கண்டிப்பாக கவரும். இதன்மூலம் எவ்வாறேனும் உங்களின் பொருள் விற்கப்பட்டு இலாபமும் ஈட்டப்படும் என்பது உறுதி .

தேடலை இலகுவாக்க #HASHTAG குறியீடு சொற்தொடரை பயன்படுத்துங்கள்.

குறியீட்டு தொடர் #HASHTAG பயன்படுத்துதல் என்பது சமூக வலைத்தளத்தில் அனைவராலும் விரும்பப்படும் விடயம். நாம் பகிரும் பதிவு எது தொடர்பானது, எந்த பொருள், ரகம், விலை, போன்ற அனைத்தையும் இவ்வாறு சதுரக்குறி கொண்ட குறியீடாக பயன்படுத்தி சொல்லுவது சிறந்த யுக்தி.

வாடிக்கையாளர் பொருட்களை தேடும்போது  அடிக்கடி பயன்படுத்தும் சொற்பதங்கள் உள்ளடக்கியதாக இந்த சதுரக்குறி குறியீடாக நாமும் பயன்படுத்தி கொண்டால் வாடிக்கையாளர் தேடுதலின் விளைவாக நமது பொருட்களும் அவருக்கு முன்னிலைப்படுத்தப்படும். எனவே இலகுவாக தேடிக்கொள்ளவும், இந்த முறைமை சிறந்தது ஆகும்.