காவிரி நீருக்காக கண்ணீர் மல்கும் தமிழகம். 

காவிரி நீருக்காக கண்ணீர் மல்கும் தமிழகம். 

இந்திய மத்திய அரசின் அலட்சியப்போக்கால் கொந்தளிக்கும் தமிழகம்

05/04/2018 | Views 273

காவிரி நீர் விவகாரத்தில், இந்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதாகக் கூறி, தமிழ் நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 3 நாட்களாக, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க வரை அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழகத்தில் அரசியல் பரபரப்பு நிலவுகிறது. 

  • காவிரி ஆறு தோற்றம்.

கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பிரம்மகிரி மலைத்தொடரில் தலைக்காவிரியில் காவிரி ஆறு பிறக்கிறது. 800 கிலோ மீட்டருக்கும் மேல் பயணித்து, தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.. தென்னிந்தியாவில் பாயும் மிகப் பெரிய நதியான காவிரி,  கர்நாடகம்,  தமிழகம், கேரளம்,  புதுச்சேரி என நான்கு மாநிலங்களை வளப்படுத்துகிறது.

  • காவிரி நீர் சிக்கல் கடந்து வந்த வரலாறு.

காவிரி பிரச்னை இன்று நேற்று தொடங்கியதல்ல. இது கர்நாடகாவுக்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே பல யுகங்களாக தொடரும் பிரச்னை. பல நூற்றாண்ண்டுகளுக்கு முன்னரான மன்னர்கள் காலத்திலேயே இந்த பிரச்னை இருந்துள்ளது. 

யுகம் யுகமாக நீறு பூத்த நெருப்பைப் போல காவிரி நீர் பிரச்னையால், தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் சிக்கல் நீடிக்கிறது. பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில்தான் காவிரி நீரை முறையாக கையாளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கும் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவை உள்ளடக்கிய பகுதி), மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே, 1897ம் ஆண்டு காவிரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதுதான், இந்த விவகாரத்தில் செய்துகொள்ளப்பட்ட முதல் சட்டப்படியான உடன்படிக்கை..

அந்த ஒப்பந்தத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டுமெனில், மெட்ராஸ் மாகாண அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை, அன்றைய மைசூர் சமஸ்தானமும் ஏற்றுக் கொண்டது. 

ஆனால், 1910ம் ஆண்டில் மீண்டும் பிரச்னை வெடித்தது. மைசூர் சமஸ்தானம் சார்பாக, காவிரியின் குறுக்கே கண்ணாம்பாடி என்ற இடத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மெட்ராஸ் மாகாணம் சார்பாக, சேலம் அருகே மேட்டூரில் அணை கட்டவும் திட்டமிடப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் முடிவாக, பிரிட்டிஷாரின் மேற்பார்வையில், 1924ம் ஆண்டில், இந்த இரண்டு அணைகளையும் அவரவர் கட்டிக் கொள்வதாக, ஒப்புதல் எட்டப்பட்டது. 

1947ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்றது. இந்திய யூனியன் புதிய அரசை அமைத்தது. அப்போது, மொழி வாரியான மாநில பிரிவினை ஏற்பட்டது. 

இதன்படி, தெலுங்கு பேசுவோர் ஆந்திரா என்றும், தமிழ் பேசுவோர் மெட்ராஸ் என்றும், மலையாளம் பேசுவோர் கேரளா என்றும், கன்னடம் பேசுவோர் கர்நாடகா என்றும் பிரித்துக் கொள்ளப்பட்டது. இதனால், மெட்ராஸ் மாகாணத்தின் நிலப்பரப்பு வெகுவாகக் குறைந்தது. பின்னர் இது தமிழ்நாடு எனவும் பெயர் மாற்றப்பட்டது. 

அதேசமயம், மைசூர் சமஸ்தானம் மட்டுமின்றி தமிழர்கள் அதிகம் வசிக்கும், கூர்க், குடகு, பெங்களூரு, சிக்மகளூர் உள்ளிட்ட பகுதிகளையும் கர்நாடகா தன்னோடு சேர்த்துக் கொண்டது. இதனை அன்றைய மெட்ராஸ் மாகாண ஆட்சியாளர்கள் விட்டுக் கொடுத்துவிட்டனர்.. 

குடகு மலையில்தான் காவிரி உற்பத்தியாகிறது. கூர்க், குடகு பகுதிகளை முதலில் கர்நாடகா தன்னோடு சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது. இதனால், அந்த பகுதி மக்கள், தமிழ்நாட்டுன் இணைய விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் புறக்கணித்துவிட்டனர்.. வேறு வழியின்றி கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் இணைந்துகொண்டனர். இங்குதான் காவிரி பிரச்னைக்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டது. 

ஆம். தமிழ் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளை தன்னோடு சேர்த்துக் கொண்ட கர்நாடகா, தமிழர்களை இரண்டாம் தர மக்களாக நடத்த தொடங்கியது. அத்துடன், தமிழ்நாடு அரசுக்கும் காவிரி விவகாரத்தில் பெரும் குடைச்சல் தர முடிவு செய்தது. 

1970களில் இருந்து, தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவில் தில்லுமுல்லு செய்வதை கர்நாடகா வாடிக்கையாக பின்பற்றியது.. காவிரி எங்கள் நிலத்தில் உற்பத்தி ஆவதால், எங்களுக்கு அதிக உரிமை என்று கர்நாடகாவும், தமிழ்நாட்டில்தான் அதிக தொலைவு பயணிக்கிறது, எனவே கடைமடை பகுதி என்ற முறையில் எங்களுக்கே அதிக உரிமை என்றும் தமிழ்நாடும் போர்க் கொடி உயர்த்தின. 

கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், தமிழக பேருந்துகள் தீயிட்டு கொளுத்தப்படுவதும் அவ்வப்போது நடக்க தொடங்கின. கன்னட மொழியினர், வெறிபிடித்தவர்களாக இந்த விவகாரத்தில் நடந்துகொள்ள, தமிழக ஆட்சியாளர்கள் சாத்வீக முறையை பின்பற்றி வந்தனர். 

1976ம் ஆண்டில் இதுபற்றி புதிய ஒப்பந்தம் நிறைவேற்ற கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், எம்ஜிஆர் தலையிட்டு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தையே பின்பற்ற வேண்டும் என நிர்பந்தம் செய்தார். 

இதனால், அதிருப்தி அடைந்த கர்நாடகா, நீர் வழங்குவதில் மீண்டும் இடையூறு கொடுத்து வந்தது. எம்ஜிஆர் மறைந்த நிலையில், 1990ம் ஆண்டு தஞ்சாவூர் விவசாயிகள் காவிரி பிரச்னை பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இதன்பேரில், காவிரி தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்தும்படி, இந்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை முன்னிறுத்தி, தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, காவிரி தீர்ப்பாயம் அமைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஒத்துழைப்பில், காவிரி தீர்ப்பாயம் நிறுவப்பட்டது. 

ஆனால், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, கர்நாடகா அரசு தமிழகத்திற்கு நீர் திறந்துவிட தொடர்ந்து மறுப்பு தெரிவித்தது. 

1993ம் ஆண்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததால், வேறு வழியின்றி இந்திய அரசும், கர்நாடகா அரசும் இறங்கி வந்தன. அதன்பின்னர் வந்த ஆண்டுகளில் பெருமழை பெய்யவே, காவிரி நீர் பங்கீட்டில் சிக்கல் இன்றி சுமூக நிலை நீடித்தது. 

1995ம் ஆண்டில் இருந்து வறட்சி அதிகம் வர ஆரம்பிக்கவே, காவிரி நீரை கூடுதலாக ஒதுக்கும்படி தமிழ்நாடு சார்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இதில், உச்ச நீதிமன்றம் 11 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிட, கர்நாடகா நிராகரித்துவிட்டது. பின்னர், நரசிம்மராவ் முன்னிலையில் கர்நாடகா, தமிழ்நாடு முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், 6 டிம்எசி மட்டுமே நீர் தர கர்நாடகா முன்வந்தது.. 

வேறு வழியின்றி, 1998ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. இதில், புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டன. இந்த ஆணையத்திற்கு, காவிரி கண்காணிப்புக் குழு ஆலோசனை வழங்குகிறது. 

இதன்பின், 2002ம் ஆண்டு வரை பிரச்னை இன்றி காவிரி நீர் சுமூகமாக பங்கீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால், 2002ல் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடகா சண்டித்தனம் செய்தது. 

2007ம் ஆண்டில் காவிரி தீர்ப்பாயம் 1000 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பை அறிவித்தது. அதாவது, 1991ம் ஆண்டில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயம், 16 ஆண்டுகளுக்குப் பின் தனது தீர்ப்பை வெளியிட்டது. 

அதன்படி, கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும், கேரளாவுக்கு 21 டி.எம்.சி-யும் பகிர்ந்துக் கொள்ளவேண்டும். இம்முறையும் கர்நாடகா எதிர்த்தது. எனவே, இந்த தீர்ப்பின் விவரம் மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. இதற்கும் கூட தமிழ்நாடு அரசு பெரும் போராட்டம் மேற்கொண்டது. இறுதியாக, 2013ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் காவிரி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியானது. ஆனாலும், சொன்னபடி தமிழத்திற்கு காவிரி நீர் வழங்கப்படவில்லை..

ஆண்டுகள் செல்ல செல்ல தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படுவதே வாடிக்கையாக இருந்து வருகிறது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றை நிரந்தரமாக அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்துவருகிறது. 

  • உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு.

இந்நிலையில், கடந்த 1990ம் ஆண்டு தஞ்சை விவசாயிகள் தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம், சமீபத்தில் வெளியிட்டது. 38 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில், தமிழகத்திற்கு, 177.25 டிஎம்சி நீர் தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க, செயல்திட்டம் ஏற்படுத்தும்படி, உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

ஆனால், இது தமிழகத்திற்கு ஏற்புடையதல்ல.. எனினும், விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், இந்த நீரை தரவும் தற்போது கர்நாடகா சுணக்கம் காட்டுகிறது. 

மேலும், உச்சநீதிமன்றம் கூறியுள்ள செயல்திட்டம் பற்றி விளக்கம் தெரியவில்லை என்று, மத்திய அரசும், கர்நாடகா அரசும் நாடகம் ஆடுகின்றன. இதுதான் தற்போது தமிழகத்தில் தற்போது பெரிய அளவில் போராட்டம் வெடிக்க காரணம்.. 

தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம் என பல தரப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க சார்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய கேலிக்கூத்தாகவும் முடிந்துள்ளது. 

  • மவுனம் காக்கும் இந்திய பிரதமர் மோடி.

இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி, இதுவரை வாயை திறந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இது தமிழக மக்களையும், அரசியல் கட்சிகளையும் மேன்மேலும் அதிருப்தியடைய செய்துள்ளது.  போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பதால், தமிழ்நாட்டில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

2000 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்தவர்கள் தமிழர்கள். சோழ நாடு சோறுடைத்து எனும் சொல் பதமே போதும், காவிரி நீருக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவை உலகுக்கு உணர்த்த..சோழ நாடு இன்றில்லை..ஆனாலும், காவிரி உள்ளது..இது வறண்டுவிடக்கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு 

 

 

Author : Parthiban.Samar. - Chennai, India.