காவிரிக்காக களமிறங்கிய  தமிழ் திரையுலகம்.

காவிரிக்காக களமிறங்கிய  தமிழ் திரையுலகம்.

தனிக்கொடி பிடித்த சிம்பு, பாரதிராஜா 

10/04/2018 | Views 168

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், தமிழ் சினிமாத்துறையும் இதற்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம், தமிழ் நடிகர்களுள் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த அறவழி மௌன போராட்டம் இடம்பெற்றிருந்தமை அறியப்படுகின்றது. 

காவிரி மேலாண்மை வாரியம்

இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதை மேற்பார்வை செய்து, ஆண்டுதோறும் சீராக நிர்வகிப்பதற்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதுபற்றி தங்களுக்கு புரியவில்லை என்று, இந்திய அரசு சார்பாக, உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இந்திய அரசு, கர்நாடகா மாநில அரசும் சேர்ந்து நாடகமாடி, தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகக் கூறி, போராட்டம் வெடித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாகவும், அரசியல் கட்சிகள் ஆதரவுடனும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஆனால், இதுவரை இந்த விவகாரத்தில் உரிய விளக்கத்தை, இந்திய அரசு மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, தமிழ் சினிமா துறையும், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. 

தமிழ் திரை உலகினர் நடத்திய அற வழிப் போராட்டம் 

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக, கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி  தமிழ் சினிமா துறையினர் அறவழிப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த அறவழிப் போராட்டம் நடைபெற்றது. விஷால், பொன்வண்ணன், நாசர் போன்ற நடிகர் சங்க நிர்வாகிகள் அறவழிப் போராட்டத்திற்கு தலைமை வகித்தனர். 

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விவேக், சித்தார்த், சத்யராஜ், மன்சூர் அலிகான், பிரசாந்த், இளையராஜா, வைரமுத்து உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். கமல் கருப்பு சட்டையில் வர, ரஜினி வெள்ளை உடையில் வந்திருந்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குனர் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தினரும் இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

பல முன்னணி நடிகர்கள் வந்தாலும், அஜித், சிம்பு போன்ற பலர் வரவில்லை என்பதும் அறவழிப் போராட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  

  1. மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்கும் எந்த விசயத்தையும் அரசு நிர்வாகம் செயல்படுத்தக்கூடாது.
  2.  காவிரி நதி நீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பங்கீடு விவசாயிகளுக்கு பெற்றுத் தரவேண்டும். 
  3. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழக மக்களுக்கும், கர்நாடகா மக்களுக்கும் இடையே நட்புறவை மேம்படுத்த இந்திய அரசும், கர்நாடகா அரசும் முன்வரவேண்டும். 
  4. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனே மூட வேண்டும். 

 

மேற்கண்ட தீர்மானங்கள் சினிமாத்துறை நடத்திய அறவழிப் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

போராட்டத்தின் இறுதியாக, நடிகர்கள் சத்யராஜ், ரஜினி, விஷால் போன்றவர்கள் அங்கிருந்தவர்களிடையே பேசினர். 

கொந்தளித்த சத்யராஜ்! 

சத்யராஜ் பேசுகையில், ‘’ தமிழர்களின் உணர்வை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேற எந்த எல்லைக்குச் சென்றும் போராட தயாராக உள்ளோம். ராணுவமே வந்தாலும் எதிர்கொள்வோம். தமிழர்களின் மீது அக்கறை உள்ளவர்கள், தமிழர் பின்னால் வந்து நில்லுங்கள். மற்றவர்கள் ஓடி, ஒளிந்துகொள்ளுங்கள்,’’ என்று பேசினார். 

சாந்தமாகப் பேசிய ரஜினிகாந்த்:

ரஜினிகாந்த் பேசுகையில், ‘’தமிழர்களின் கோபத்தை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். காவிரி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் இந்திய அரசுக்கு எதிரானதாக மாறிவருகிறது. அதனை புரிந்துகொண்டு, தமிழர்களுக்கு உரிய நீதியை வழங்கிட வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்தில் நடத்தாமல் ரத்து செய்ய வேண்டும். அதுபோல, ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று உள்ளிட்டவற்றை சுகாதாரமாக நாம் வைத்துக் கொண்டால் மட்டுமே மனித இனம் வாழ முடியும். தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி, இலங்கையில் இருந்து இங்கே அகதிகளாக வந்து வாடுவோருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டுகிறேன்‘’, எனக் குறிப்பிட்டார். 

‘கையெழுத்து மனு தருவோம்’ 

இதேபோன்று, நடிகர் விஷால் பேசும்போது, விவசாயிகள் பிரச்னையை வலியுறுத்தி, 25,000 பேரிடம் கையெழுத்து பெற்று, தமிழக ஆளுநரிடம் கோரிக்கை மனுவாக வழங்க உள்ளோம், என்று தெரிவித்தார். 

தனிக்கொடி பிடித்த நடிகர் சிம்பு: 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு, அறவழிப் போராட்டம் நடத்திய நிலையில், நடிகர் சிம்பு தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனியாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். 

அப்போது அவர் பேசியதாவது: 

தமிழக மக்களுக்கு எதிராக பல வழிகளில் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் இறந்தபிறகு தமிழகத்தை பலரும் சூறையாட தொடங்கியுள்ளனர். அவர் மறைந்த நாள் முதலாக, இன்று வரை தமிழகத்தில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறதே ஒழிய, குறைந்தபாடில்லை.  

கர்நாடகா மக்கள் நம் எதிரியில்ல. நாம் ஒன்றும் அவர்களிடம் பிச்சை கேட்பதில்லை. அவர்களிடம் அதிகமாக உள்ளதையே எங்களுக்கு தரும்படி கேட்கிறோம். கர்நாடகாவில் உள்ள கன்னட பெண்கள், தமிழ் இளைஞர்களுக்கு தண்ணீர் தரவேண்டும். அதை செல்ஃபியாக எடுத்து புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகளுக்கு இந்த பிரச்னையில் உள்ள பாசப் பிணைப்பு புரியும். அரசியல்வாதிகள் நடத்தும் நாடகம் முடிவுக்கு வரும். காவிரி விவகாரத்தில் உண்மையான தீர்வு கிடைக்கும். 

இவ்வாறு நடிகர் சிம்பு தெரிவித்தார். 

பாரதிராஜா தலைமையில் திரண்ட போட்டி குழு: 

சினிமாத்துறை அறவழிப் போராட்டம், சிம்பு பேட்டி எல்லாம் முடிந்த நிலையில், ஏப்ரல் 9ஆம் திகதி இயக்குனர் பாரதிராஜா தலைமையில், அமீர், வ.கவுதமன், தங்கர் பச்சான் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். 

காவிரி விவகாரத்தில் பல போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்த அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையையும் வலியுறுத்தினர். 

மொத்தத்தில், சினிமாத் துறையில் ஒற்றுமை இல்லை என்பது இந்த விவகாரங்களால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளைப் போல, சினிமாத்துறையினரும் ஒற்றுமை இல்லாமல், தனித்தனி கோஷ்டியாகச் செயல்படுகிறார்கள்.. இவர்களால் நமக்கு எப்படி நன்மை கிடைக்கும் என்று, தமிழக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்…  
 

 

 

Author : Parthiban.Samar. - Chennai, India.