கொழும்பு வீதிகளில் இரவு நேரங்களில் நடப்பது என்ன

கொழும்பு வீதிகளில் இரவு நேரங்களில் நடப்பது என்ன

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அரங்கேறும் கலாச்சார சீரழிவுகள் 

11/04/2018 | Views 409

இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளிலும் காலை முதல் மாலை வரை சாதாரணமாக மக்கள் நடமாட்டம் என்பது எப்போதுமே இருந்த வண்ணமே இருக்கும். ஆயினும் இரவு நேரங்களில் கொழும்பு மற்றும் புற நகர் பகுதிகளில்  வேறுபட்ட மாய உலகம் இருப்பதனை பொதுவாக யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.

இரவின் நிசப்தத்தை கெடுக்கும் நிகழ்வுகள். 

அண்மைக்காலமாக கொழும்பை அண்மித்த பகுதிகளில் இரவு நேரங்களில் மட்டும் பாரிய இரைச்சல் சத்தங்களும், வாகன ஓட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக பொதுமக்கள் பலரும் விசனப்படுவது அறியப்பட கூடியதாக உள்ளது. 

இதற்கான காரணம் யாதென தேடும் பொழுது கொழும்பு மற்றும் புறநகர்களில் வேறுபட்டதொரு இரவுநேர மாய வாழ்க்கை மறைமுகமாக உருவாகி வருகின்றமை தெரிகின்றது .

அதாவது இரவு நேரங்களில் கொழும்பு மற்றும் புறநகர்களில் இரவிரவாக பாரிய சத்தத்துடன் மோட்டார் வாகனங்கள் அணிவகுப்பும், ஒழுங்குமுறையற்ற மோட்டார் வாகன பந்தயங்களும், உயிராபத்துமிக்க இரவுநேர களியாட்டங்களை தொடர்ந்தும் நிலவுவதாக அறியப்படுகின்றது.

களியாட்ட களிப்பில் அரங்கேறும் அபாயங்கள்.

உல்லாச பிரயாண துறையில் இலங்கை முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக திகழ்கின்றது. இலங்கையின் வருமான வழி மூலங்களில் அதிகபட்ச வருமானம் ஈட்டும் வகையில் இருப்பது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்குமே ஆகும். அவ்வாறே போதைப்பொருள் விற்பனை, சட்டவிரோத மது, சூதாட்ட பாவனைகள், மற்றும் அனைத்து சட்ட விரோத செயல்களும் நாளுக்கு நாள் மும்முரமாக வேறுபக்கமாக அதிகரித்த வண்ணமே இருப்பது அறியப்படுகின்றது.

கசினோ கலாச்சாரத்தில் கொடிகட்டி பறக்கும் கொழும்பு .

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் இலங்கையில் உள்ள அழகிய இடங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பார்க்கப்படவேண்டிய இடங்கள் இருப்பதாக கூறினாலும் , இரவிரவாக  அரங்கேறும் கசினோ களியாட்ட நிகழ்வுகளில் அதிகபட்சமாக பணம் ஈட்டுவதை நோக்க்கமாக கொண்டு இலங்கைக்கு வருகின்றனர் என்பது அறியப்படாத ரகசியம். 

இவ்வாறான களியாட்ட வீடுதிகளில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் பணம் புரள்வு இருப்பதுவும், அத்துடன் அனைத்துவித சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் தீவிரமடைந்து வருவதனையும் அவதானிக்க கூடியதாயுள்ளது.

வார இறுதியும் இரவு பந்தயங்களும்.

வாரநாட்களை தவிர்த்து வார இறுதி நாட்கள் என்பது மக்கள் களைப்பு நீங்கள் ஓய்வினை எதிர்பார்த்து இருக்கும் தினமாக இருக்கும். அப்போது அரச நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பொதுவான வேலைத்தளங்கள் ஆகியன இயங்குவது இல்லை. இந்த நேரங்களில் மக்கள் தமது ஓய்வினை செலவழிக்கும் விதமாக பல்வேறு விடயங்களில் தமது விடுமுறையினை குதுகலமாக செலவு செய்வார்கள்.

மேலும் சிலர் கொழும்புக்கு வெளியே இருந்து  வேலையின் நிமித்தமாக வருவதுவும் , வார இறுதி நாட்களில் தமது ஊர்களுக்கு செல்வதுமாக இருப்பதன் காரணமாக சனி மற்றும் ஞாயிறு தினங்கள் கொழும்பு மற்றும் அண்மித்த நகர்ப்பகுதிகளில் அதிகமாக கூட்டங்களும், வாகன இரைச்சல்களும் இல்லாத அமைதியான நகராக இருக்கும். ஆனால், அதுவே அந்த இரண்டு நாட்களின் இரவு நேரங்களில் இது கொழும்பு நகர் தானா என ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு பல்வேறு நிகழ்வுகள் நிகழும் மாய உலகமாக கொழும்பு காட்சியளிக்கும். 

இந்த இரண்டு வார இறுதி நாட்களிலும் பதியப்படாத , சட்டவிரோதமான பாரிய பந்தய மோட்டார் வாகனங்கள் கொண்டு வயது குறைந்த மற்றும் அனுபவமில்லாத நபர்கள் சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அதன் மூலமாக பல லட்சக்கணக்கான பந்தயப்பன புரள்வுகள் இட ம்பெறுவதாகவும்  தெரிகின்றது.

கடந்த வாரம் இவ்வகையான பெறுமதிமிக்க , பதிவுசெய்யப்படாத பந்தய வண்டிகளை கொழும்பு புறநகர் காவல்துறையினர் கைப்பற்றியதுடன் பல இலட்சக்கணக்கான பண மோசடிகளில் ஈடுபடும் கும்பலினையு கண்டறிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மோட்டார் வாகனங்களில் காணப்பட்ட எஞ்சின் மற்றும் சேஸ் எண்கள் போன்றன போக்குவரத்து விதிகளுக்கு மீறியதாக இருந்ததாக போக்குவரத்து காவல்துறையின் சிறப்பு அத்தியட்சகர்  சுராஜ் அபயசேகர தெரிவித்துள்ளார்.

வீதி மற்றும் போக்குவரத்து ஆணைக்குழுவின் விதிகளை மீறியதும், அதிகபட்ச வேகத்தினை  கொண்டதுமான கவாசாகி, ஹார்னெட், யமஹா ஆகிய மோட்டார் வாகனங்களும்,  250 cc க்கு அதிகமான 400cc மற்றும் 600cc க்கும் கூடியதான  எஞ்சின் வலுவினைகொண்ட வாகனங்களாகவே கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிகின்றது.

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல், இலங்கை வீதிகளில் பயணிக்க கூடாது என்ற கண்டிப்பான விதிமுறைகளை தாண்டி இவ்வகை வாகனங்கள் எவ்வாறு கொழும்பு வீதிகளை வந்தடைந்து இருக்கும் என காவல்துறையினர் விசாரித்தவண்ணம் இருப்பதாக அறியப்படுகின்றது.

நாட்டின் சட்டங்கள் , மற்றும் ஒழுக்க நீதிகள் என்னதான் அதிகபட்சமாக இருப்பினும், மிகவும் வலுவான தண்டனைகள் காணப்பட்டாலும்,  வேறுவிதமான சட்டவிரோத மாய வலையில் மக்கள் வேறுவிதமாக பாதிக்கப்பட்ட வண்ணமாகவே இருக்கின்றனர். போதைப்பொருள் பாவனைகள், கொலை மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடைய பாதாள உலக அநீதிகள் காவல்துறையின் கண்களில் மண்ணை தூவும் விதமாக நடந்தேறி வருகின்றமையும் தெரிகின்றது. இவ்வகை சட்ட விரோத களங்களாக காணப்படக்கூடிய களியாட்ட வீடுதிகள் மற்றும் இரவு நேர உல்லாச வீடுதிகளை அரசாங்கத்தின் அனுமதியுடன் நடத்தி வந்தாலும் அங்கு அரங்கேறும் சட்டவிரோதங்களை மட்டும் தடுக்க முடிவதும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இவ்வகையான களியாட்டம், மற்றும் வீடுதி தொடர்பான சட்டங்கள் மற்றும் வரிவிதிப்புக்கள் போன்றன மக்களை பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்டதா அல்லது சட்ட விரோத செயல்களுக்கு தீனி போடும் வகையில் உள்ளனவா என புரிந்துகொள்ள முடியாத வண்ணம் உள்ளது. 

மேலைத்தேய  மோகத்தில் மக்கள் அனைவரும் திளைத்தவண்ணம் இருப்பது வாழ்வியல் முன்னேற்றம்  என்று பலரும் கூறினாலும் பன்னெடுங்காலமாக இலங்கை மக்கள் பின்பற்றிவந்த கலாச்சார விழுமியங்கள் இவ்வகை முற்போக்கு விடயங்களால் சீரழிவது மட்டுமன்றி மக்களின் நற்பண்புகளை  பங்கம் விளைவிப்பது மட்டுமா? குற்ற செயல்களின் விளைநிலமாகவும் இருப்பது கண்டிக்கத்தக்கது அல்லவா?