வாகனங்களில் பயணம் செய்வதற்கு முன்னர் இவற்றை கவனியுங்கள் 

வாகனங்களில் பயணம் செய்வதற்கு முன்னர் இவற்றை கவனியுங்கள் 

வாகனங்களில் தூர பயணங்கள் மேற்கொள்வதற்கு முன்னர் இவற்றை கணிப்பாக கவனிக்க வேண்டும்

10/05/2018 | Views 373

இலங்கை போன்ற நாடுகளில் சனத்தொகை அளவுக்கு ஈடுகொடுக்கும் விதமாக வாகனங்களின் அளவும் காணப்படுவதாக ஆய்வு தகவல்கள் அறியத்தருகின்றன.இந்த காலத்தில் ஒரு குடும்பத்தில் 4பேரில் ஒருவருக்கு சொந்த வாகனம் இருப்பதாக புள்ளிவிபர கணக்குகள் அறியத்தருகின்றன. அவ்வாறே பயணங்கள், தூர பயணங்கள் போன்றவற்றுக்கு பலரும் தத்தமது சொந்த வாகனங்களையே எடுத்து செல்லவிரும்புவதும் வழக்கம். 

தூர பயணங்கள் செல்வதற்கு முன்னதாக நீங்கள் சில முன்ஏற்பாடுகளை செய்துவைத்திருக்கலாம். எவ்வாறெனினும் அவற்றினை சரிபார்த்து, எதுவித தவறுதல்களும் இடம்பெறாத வண்ணம் உங்களின் பயணம் சிறப்பாக தடையின்றி அமையவேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும். அவ்வாறு தூர பயணங்களில் சொந்த வாகனங்களில் செல்ல தயாராக இருப்பவர்கள் முன்கூட்டியே கவனிக்க வேண்டிய அம்சங்களில் மிகவும் முக்கியம் வாய்ந்தது டயர்கள் பற்றிய விடயங்கள் ஆகும். வாகனத்தின் டயர்சக்கரங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதனை கவனிப்போம்.


டயர் சக்கரங்களின் முக்கியத்துவம்.

ஆய்வொன்றின் படி வீதிகளில் இடம்பெறும் பல விபத்துக்களுக்கு முக்கிய காரணியாக அமைவது டயர்  சக்கரங்கள் வெடிப்பது என அறியப்படுகின்றது. தூர பிரயாணங்கள் மேற்கொள்வதற்கு முன்னர் செய்யப்படும் முன் ஏற்பாடுகளுடன் உங்கள் வாகன டயர் சக்கரங்களை சரிபார்க்க தவற கூடாது. அத்துடன் வாகனத்தின் நிலையினையும் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியம்.

உங்களிடம் எந்தவகை வாகனம் இருந்தாலும் அதன் சக்கரங்கள் பற்றி கவனம் எடுப்பது சிறந்தது. காரணம் என்னதான் புதிதாக, விலையுயர்ந்த வாகனமாக இருந்தாலும் அதன் சக்கரங்கள் மூலமே பயணிக்கும். அவை வெடிக்காது, சேதமாகாது என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் அவை முற்றிலும் உண்மை அல்ல. வாகனங்கள் அனைத்திற்குமான டயர் சக்கரத்தின் நிலையானது ஒரேவிதமாகவே இருக்கும்.

என்ன செய்யலாம்?  

  • வாரத்துக்கு ஒரு முறையாவது வாகனத்தின்  தயார் சக்கரத்தின்  காற்றைப் பரிசோதிப்பது அவசியம். நெடுஞ்சாலைப் பயணத்துக்குக் கிளம்பும்போது நிச்சயம்  டயர்களில் காற்றின் அளவை சரிபார்க்காமல் வாகனத்தை  எடுக்கக்கூடாது.
  • உங்கள் வாகனத்தை   வெளியே எடுத்து செலுத்த தொடங்கும்  5 கிலோமீற்றர் பயணத்திற்குள்  காற்றை சரிபார்க்க வேண்டும். டயர் சக்கரம் ஏற்கெனவே சூடாக இருக்கும் என்பதால் அதன்பிறகு காற்று நிரப்புவது சரியாக இருக்காது. 
  • இப்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான வாகனங்களில் குழாயற்ற (TUBELESS) டயர்கள்தான் காணப்படுகின்றது.இதனால் டயர்களில் ஓட்டை விழுந்து  இருப்பதே தெரியாது. அதனால் வாரத்துக்கு ஒரு முறை டயரை பரீட்சிக்கும் போதுதான் திடீரென ஒரு டயரில் காற்று மிகவும் குறைந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
  • ஒரு டயரின் ஆயுட்காலம் என்பது 30,000 & 40,000 கிலோ மீற்றர்கள் தான் என்கிறது வாகன ஆய்வுகள் . சர்வதேச நிறுவனம் தயாரித்திருக்கும் டயர் 50,000 கிலோ மீற்றர்கள்வரை பயன்படுத்தலாம். ஒன்றும் ஆகாது என்றெல்லாம் எந்த டயரையும் நம்ப முடியாது. அதற்கு மேல் அந்த டயர் நன்றாகவே இருக்கிறது என்றாலும் வாகன சேவை நிபுணர்களின்  (Service Advisors)  அறிவுரைப்படி மாற்றுவது நல்லது. 
  • எக்காரணம் கொண்டும் விலை குறைவாக இருக்கிறது என்கிற காரணத்துக்காக தரமற்ற டயர்களை வாங்கிப் பொருத்தாதீர்கள்.
  • நெடுஞ்சாலைப் பயணத்தின்போது உங்களுக்கு ஓய்வுதேவையோ இல்லையோ வாகனத்துக்கும் அதன் சக்கர, டயருக்கும் ஓய்வு தேவை. குறைந்தது 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது 10 நிமிடம் பிரேக் விடவேண்டியது அவசியம். 
  • வாகனத்திற்கென அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பாரத்தினை  ஏற்றக்கூடாது. பாரம் கூடுதல் என்பது  டயர்களுக்கு கூடுதல் சுமை.
  • அழகுக்காக விலை மலிவான சக்கர மூடிகளை (WHEEL CAP) வாங்கிப் பொருத்த வேண்டாம். சில நேரங்களில் இவை டயரின் ஓரத்தை தேய்த்துவிடும். 

டயர் வெடித்தால் என்ன செய்யவேண்டும்?

டயர் வெடிப்பது என்பது ஒரு பாரிய குண்டு வெடிப்பது போன்று அதிக சத்தைதை எழுப்பும். இந்த சத்தமே நம்மை பயத்துக்குள் ஆழ்த்தி, அடுத்து என்னசெய்வதென்று தெரியாத நிலைக்குத் தள்ளிவிடும். அதனால் சட்டெனப் பதற்றப்படாமல் டயர் வெடித்தால் உடனடியாக பிரேக்கில் கால் வைத்து அழுத்தாதீர்கள். சடன் பிரேக் (Sudden break) பிடித்தால் வாகனம்  கவிழ்ந்துவிடும். மாறாக ஆக்லிலேட்டர் பெடலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அழுத்தத்தைக் குறைத்து, வேகத்தைக் குறைக்க வேண்டும். 

ஸ்டீயரிங்கில் உங்கள் கை பலமாக இருக்க வேண்டும். டயர் வெடித்த உடனேயே வாகனம் திரும்பும் என்பதால் ஸ்டீயரிங்கை அழுத்தமாக பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். எந்தப்பக்கம் வாகனம் இழுக்கிறதோ அதற்கு எதிர்பக்கமாக ஸ்டீயரிங்கைத் திருப்ப வேண்டும். திருப்ப வேண்டும் என்பதற்காக உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி ஸ்டீயரிங்கை முழுவதுமாகத் திருப்பக்கூடாது. வாகனத்தின் வேகம் குறையும்வரை நேராகச் செல்வதற்கு ஸ்டீயரிங்கை கட்டுப்படுத்திட  செய்ய வேண்டும். 

க்ரூஸ் கன்ட்ரோல் மோடில் வைத்து காரை ஓட்டிவந்தீர்கள் என்றால் உடனடியாக க்ரூஸ் கண்ட்ரோலை ஆஃப்செய்துவிடவேண்டும்.

எச்சரிக்கை பட்டனைத் தட்டிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாலையின் ஓரத்துக்கு காரைக் கொண்டுவந்து நிறுத்துங்கள்.