தாய்மார்களே சிறந்த தொழில் முனைவோர்

தாய்மார்களே சிறந்த தொழில் முனைவோர்

குடும்ப பொறுப்பு மிக்க தாய்மார்களால்  தொழில் ரீதியில் சாதிக்க முடியும்

11/06/2018 | Views 289

தொழில் சூழ்நிலையினை பொறுத்தவகையில் பல பெண் தொழில்முனைவோர்கள் இன்றைய காலக்கட்டத்தில் பல முன்னணி பதவிகளில் இருப்பது மட்டுமன்றி சிறந்த தொழில் முனைவோர்களாகவும் இந்த சமூகத்தில் திகழ்கின்றனர். பலராலும் வியந்து பார்க்கப்படுவது என்னவென்றால் எப்படி குடும்ப பொறுப்பு மிக்க தாய்மார்கள் இவ்வாறு தொழில் ரீதியில் சாதனையாளராக திகழ்கின்றனர் என்பதுதான்.

பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களால் இவ்வாறு வெற்றிமிக்க தொழில்முனைவோர்களாக சாதிக்க முடியும் என ஆய்வின் மூலம் இனம் காணப்பட்டுள்ளது. குழந்தைகளை பொறுப்பு மிக்க குடும்ப தலைவியாக பராமரிக்கும் தாய்மார்களே பெரும்பாலான பெரு நிறுவனங்களின் வெற்றிவாகை சூடும் நிர்வாகநிலை தொழில் முனைவோர்களாக இருக்கின்றனர் என்பது வியத்தகு உண்மை.  எப்படி இவர்களால் தமது குடும்பத்தினையும், தொழிலையும் வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும் என்பதற்கு காரணிகள் இவைதான்.

தாய்மையின் கடமையும் பொறுப்பும்.

எமது தாய்மார்கள் கடமைக்காக குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பணியாற்றுவது இல்லை. அவர்களின் வலிகளையும், இன்னல்களையும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு எவ்வாறு தமது குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக முழு ஈடுபாட்டுடன் பணி புரிகிறார்கள் என்பதற்கு விளக்கம் கொடுக்க தேவையில்லை . சிறந்த தாய்மார்கள் தமது முழு வாழ்க்கையையும் தமது குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக அர்ப்பணித்து செயற்படுவது அறிந்ததே.

அவ்வாறே என்னதான் இன்னல்கள் வந்த பொழுதும் தமது குடும்பத்தினரின் மகிழ்ச்சியில் தமது முழு துன்பத்தினையும் மறந்த நிலையில் ஒரு தாயினால் மகிழ்ச்சியினை வெளிப்படுத்த முடிகின்றது. இவை அனைத்து செயல்பாடுகளையும் ஒத்ததாகவே தொழில் நிலையில் இருக்க கூடிய முன்னணி தொழில்முனைவோரும் நடந்துகொள்வார்கள் .

அதாவது தொழில் நிலையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்பவை எந்த நேரத்திலும், எவ்வகை ரூபத்திலும் வரலாம். அவற்றினை கடமைக்காக நேரகாலம் பார்க்காமல் முழு பொறுப்புடன் கையாளத்தெரிந்த ஒரு தொழில் முயற்சியாளரால் மட்டுமே எவ்வகை கடினமான தருணத்தையும்  இலகுவாக கையாள முடியும். தொழிலில் எவ்வளவு பெரிய நட்டம் ஏற்பட்ட போதிலும் ஏதேனும் சிறிய முன்னேற்றத்தினைக்கூட பெரியதாக கொண்டாடுவதுடன் சக தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடந்து கொள்வது வெற்றிமிக்க தொழில் முனைவோரது கடமை

பதற்றமற்ற பொறுமை நிலை 

எவ்வளவு பெரிய பதற்றநிலை வரும் பொழுதும் ஒரு குடும்பத்தை பராமரிக்கும் தாய்மார்களால் அங்கு ஏற்படக்கூடிய சிக்கல் நிலையினை இலகுவாக கையாள முடியும். அவ்வாறே சக குடும்ப உறுப்பினர்களையும் இயல்பாக வைத்துக்கொள்வதற்கும், குடும்ப உறவுகளிடையே நல்ல உறுதியான உறவுநிலையினை பேணுவதற்கும் மத்தியஸ்தம் புரிவது ஒவ்வொரு தாய்மாரினதும்  தலையாய கடமையாக உள்ளது. 

அவ்வாறே தொழில்நிலை என்ற ரீதியில் ஏற்படக்கூடிய இன்னல்களை கண்டு பதறிடாமல் எவ்வகை சிக்கல் நிலையினையும் லாவகமாக கையாளும் திறனை கொண்டு இருப்பது நல்லதொரு தொழில்நிலை முயற்சியாளனுக்கான சிறந்த பண்பாகும்

வேடிக்கை வினோத பங்களிப்பு 

தாய்மார்கள் தமது குடும்பத்தாரின் மகிழ்ச்சி நிலைக்கென வேடிக்கை மற்றும் களியாட்டங்களில் தாமாக பங்கேற்றல் என்பது அனைவராலும் விரும்பப்படுவது ஆகும். அனைத்துவித  உயரிய பொறுப்புக்கள் கொண்டவர்கள் என்ற போதிலும் விளையாட்டுக்கள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் வேடிக்கை நிகழ்வுகளில் தாமும் பங்கேற்று ஊக்கப்படுத்துவதன் மூலம் தம்மை சுற்றியுள்ள தமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாரை ஊக்கப்படுத்துவதாக அமையும். இதன் மூலம் அவர்கள் இதர பிற வேலைகளை கூட நல்ல உத்வேகத்துடன் செய்ய முற்படுவார்கள்.

அவ்வாறே தொழில் நிலை என்றபோது இவ்வகை தொழில் முயற்சியாளர்களும்  தமது பதவி பொறுப்பு போன்றன ஒரு புறம் இருந்த போதிலும், சக தொழில் புரிவோருடனும் சகஜமாக உறவினை பேணும் பொருட்டு இவ்வகை களியாட்டம், விளையாட்டு போன்றவற்றில் பங்கேற்று மகிழ்வது மனதளவில் சோர்வுநிலைகளினை கட்டுப்படுத்திக்கொள்வதுடன் சக தொழில் நிலையாளர்களை ஊக்கப்படுத்தும் பெரும் நல்லெண்ண முயற்சியாக அமையும் . இதன்மூலம் தொழிலில் நல்ல விளைத்திறனை அடைந்துகொள்வதுடன் சிறந்த தொழில்முனைவோராக தம்மை உயர்த்திக்கொள்ளவும் முடியும்.

தகுந்த பொறுப்புக்களை மட்டுமே ஏற்றல் 

என்னதான் கடமைகள் பொறுப்புக்கள் என பல்வேறு விதமாக குடும்ப சுமைகள் வந்த போதிலும்  அவற்றில் தமது குடும்பத்தாருக்கும், குழந்தைகளுக்கும் , உறவுகளுக்கும் இடையில் பங்கம்  ஏற்படாதவகையில் தம்மால் ஏற்றுக்கொள்ள கூடிய பொறுப்புக்களை மட்டுமே எந்தவொரு தாய்மாரும் ஏற்று நடப்பது அறிந்ததுவே. எந்தவொரு நிலையிலும் தமது குடும்ப சூழலுக்கும், சார்ந்த குடும்ப உறுப்பினருக்கும் ஏதுவான பொறுப்புகளை மட்டுமே குடும்பத்தலைவிகள் ஏற்பது அவர்களின் சிறந்த குடும்ப பொறுப்பினை வெளிக்காட்டும் அம்சமாகும்.

இது போலவே தொழில் நிலையில் எவ்வகை பொறுப்புக்களும், சுமைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. அவற்றில் தமது தொழில் நிலைக்கு ஏற்றதை மட்டுமே தேர்ந்தெடுத்து நடப்பதில்  தொழில்முயற்சியாளர் ஈடுபடுவதே சிறந்த பண்பு. இதனால் நேரவிரயம் மற்றும் பணவிரயங்கள் கட்டுப்படுத்தப்பட்டு நட்ட நிலை ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

பொருளாதார கட்டுப்பாடு 

பொதுவாக எல்லோர் வீடுகளிலும் உள்ள தாய்மார்கள் கூறும் வசனமே "பணம் மரத்தில் காய்ப்பது  அல்ல" என்பது. அதாவது நாம் செலவுசெய்யும் பணமானது வீண் விரயம் ஆக்கப்படாமல் சிறந்த முறையில் சிக்கனமாக செலவுகளை மேற்கொள்ள  வேண்டும் என்பதாய் அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டுவது உண்டு. பொருளாதார நிர்வாகம் என்பது ஒரு குடும்ப நிலையில் தொடங்கி சிறந்த குடும்பத்தலைவியின் தலையாய கடமை என்றே கருதப்படுகின்றது. 

என்னதான் குடும்பத்தலைவர் பணத்தினை உழைத்து வந்தாலும்  அவற்றினை சரியான நிர்வகிக்கும் திறனை கொண்டவர் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தாய்மார்களே. இவர்களின் நிர்வாகம் சரியாக அமைவதே ஒவ்வொரு குடும்பத்தின் வெற்றி நிலை என கருதப்படுகின்றது.

அவ்வாறே தொழில்நிலையில் பொறுப்புமிக்க தொழில் முனைவோராக திகழ வேண்டும் என்றால் அவரிடம் சரியான நிர்வாகத்திறமையும், பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வும் கண்டிப்பாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும்.


இவ்வாறு ஒரு குடும்பத்தின் ஆணிவேராக திகழக்கூடிய ஒவ்வொரு தாய்மாருக்கும் இருக்க வேண்டிய கடமை, பொறுப்பு மற்றும் திறன் போன்றன தொழில்நிலையினை பொறுத்த வகையில் பெரிய வேறுபாட்டினை கொண்டிருக்காது. சூழல் என்பதும் சக உறவுகள் என்பதிலும் மட்டுமே வேறுபாடு உள்ள நிலையில் எவ்வாறேனும் அடிப்படை பொறுப்பு மற்றும் செயற்பாடுகள் போன்றன தொழில் நிலைக்கும், குடும்ப நிலைக்கும் ஒத்துபோக்கக்கூடியதாகவே காணப்படுகின்றது. எனவேதான் தொழில் ரீதியில் சாதிக்க கூடிய திறமை பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது  என்பதை உணரக்கூடியதாயுள்ளது.