இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 

இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 

நாட்டை அச்சுறுத்தும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள்

16/06/2018 | Views 379

இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக, இந்திய அரசு புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது. இதன்மூலமாக, நாட்டில் பாலியல் குற்றங்கள் குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கவலை அளிக்கக்கூடிய வகையில் உயர்ந்து காணப்படுகிறது.

இந்தியா முழுவதும் சராசரியாக, 15 நிமிடத்துக்கு ஒரு சிறுமி கற்பழிக்கப்படுவதாக, ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் 500% அதிகரித்துவிட்டன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, கடந்த 2006-ம் ஆண்டு 18,967 வழக்குகள் பதிவாகின. 2016-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1,06,958 ஆக அதிகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை மட்டும் இந்த குற்றங்கள் 14% உயர்ந்துள்ளன.

பாலியல் வன்முறை குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற அதிர்ச்சி தகவலை அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களில் 50 சதவீத குற்றங்கள் தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் நடைபெறுகிறது.

 

கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 38,947 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 4,882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 4,816 வழக்குகளும், மராட்டியத்தில் 4,189 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பொறுத்தமட்டில் உத்தரபிரதேசம் (14%), மகாராஷ்டிரா மற்றும் மத்தியபிரதேசம் (13%), மேற்கு வங்கம் (6%), ஒடிசா (5%) ஆகிய 5 மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.2016-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2,167 கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 682 சம்பவங்கள் நடந்துள்ளன. ராஜஸ்தான் 365 சம்பவங்களுடன் 2-வது இடத்திலும், மத்தியபிரதேசம் 226 சம்பவங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் தேவை

பாலியல் பலாத்கார குற்றங்கள் பெருகியதற்கு மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணமாக இருந்தாலும், கல்வியறிவை மேம்படுத்துவதன் மூலமும், கடுமையான சட்டங்கள்-தண்டனைகள் வழியாகவும் இத்தகைய குற்றங்களை குறைக்க முடியும்.

ஏனெனில், நம் நாட்டை விட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு சீனா. இந்தியாவுடன் ஒப்பிடும் போது அங்கு குற்றங்கள், வன்முறைகள், ஊழல்கள் எல்லாமே குறைவாகவே உள்ளன. இதுபோல, அரபு நாடுகள், அமெரிக்கா, கனடா போன்றவற்றிலும் நடைபெறும் குற்றங்கள் குறைவாக இருக்கின்றன.

அதற்கு காரணம் கடுமையான சட்டங்கள். அங்கெல்லாம் குற்றம் செய்து விட்டு பணத்தாலோ, அதிகார பலத்தாலோ அல்லது சட்டங்களில் உள்ள ஓட்டைகளின் வழியாக புகுந்தோ யாரும் தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தண்டனை நிச்சயம். அப்படி இருப்பதால் அங்கு சாமானிய மக்களில் இருந்து அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரை தவறு செய்ய அஞ்சுகிறார்கள்.

ஆனால், இதற்கு நேர் மாறாக நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இங்கும் சட்டங்கள் இருக்கின்றன. பல சட்டங்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவும், ஓட்டைகள் ஆயிரம் நிறைந்ததாகவும் உள்ளன.இதனால், தவறுகள் செய்ய பலர் அஞ்சுவதில்லை. பணபலம், அதிகார பலம் இருந்தால் எந்த குற்றங்களை செய்தாலும் சமூகத்தில் சுதந்திரமாக இயங்கலாம் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.

எந்த நாட்டில் தண்டனைகள் கடுமையாக இருக்கிறதோ, அங்குதான் குற்றங்கள் குறைவாக இருக்கும் என்பதற்கு சீனா மற்றும் அரபு நாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.குறிப்பாக அரபு நாடுகளில் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருப்பதால்தான் அங்கு குற்றங்கள் மிகவும் குறைவு. அங்கு குற்றவாளிகள் பொது இடங்களில் தண்டிக்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். கொலை செய்தாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ நமக்கும் அதே கதிதான் ஏற்படும் என்ற பயமே பலரை குற்றம் செய்யவிடாமல் தடுக்கிறது. 

பொது இடத்தில் குற்றவாளி ஒருவனின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்கும் ஒருவனுக்கு குற்றம் செய்யக்கூடிய துணிச்சல் எங்கிருந்து வரும்? ஆக கடுமையான தண்டனைகள், மற்றவர்களை குற்றம் செய்வதில் இருந்து தடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.இதில் மனித உரிமை என்ற பிரச்சினையே எழ வாய்ப்பு இல்லை என்றும், குற்றவாளிகளை தண்டிக்காமல் நடமாடவிட்டால், நாட்டில் நல்லவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்றும் சமூக நல விரும்பிகள் கூறுகிறார்கள்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ சட்டம் (2012)’ ஏற்கனவே அமலில் இருந்தபோதிலும், நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் சில திருத்தங்களை செய்த இந்திய அரசு, கடந்த மாதம் அதன்பேரில் அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.

இந்த அவசர சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும். கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ விதிக்கப்படும்.

16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனைக்கு பதிலாக, 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும்.இதேபோன்று, 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது.மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை 2 மாதங்களுக்குள்ளும், மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களுக்குள்ளும் விசாரித்து முடிக்கவும் இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.

 

அப்பாவி சிறுமிகளை இந்த அவசர சட்டம் பாதுகாக்குமா?

இந்திய அரசின் புதிய அவசர சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மசோதா கொண்டு வரப்பட்டு நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நடந்த குற்றத்தின் வீரியம் காலப்போக்கில் படிப்படியாக நீர்த்துப்போவதுடன், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒருவித அனுதாப போக்கும் உருவாக்கப்படுகிறது. 

சாதி, மதம், இனம், அரசியல் ரீதியாக குற்றவாளிகளுக்கு ஆதரவான குரல்களும் எழத்தொடங்குகின்றன.இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும், அப்படி குரல் கொடுப்பவர்கள், அந்த நபரால் சீரழிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தை பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் வேதனை பற்றியும் சிந்தித்து பார்ப்பது இல்லை என்பதும் சமூக நலனில் அக்கறை கொண்ட பலரும் கூறுகிறார்கள்.எனவே, இந்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம், நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அச்சமே இத்தகைய குற்றங்களை பெருமளவு குறைக்கும் என்பதையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

எது எப்படியோ, சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் தற்போது உலக அளவில் விமர்சிக்கப்படும் இந்தியா, விரைவில் நற்பெயர் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு…

 

 

 

 

 

Author : Parthiban . S. - Chennai