காதல் உறவில் பணம் ஏற்படுத்தும் குழப்ப நிலை 

காதல் உறவில் பணம் ஏற்படுத்தும் குழப்ப நிலை 

காதல் உறவில் பணத்தின் தலையீடு தேவையா?

31/07/2018 | Views 180

இன்றைய உறவுகளுக்கு மத்தியிலான முக்கிய இடர் மற்றும் பிரச்சினையாக உள்ளது காதலா? காசா? என்பது ஆகும். உணர்வுபூர்வம் மிக்க உறவுகளில் பணம் ஏற்படுத்தும் பிரச்சினைகளே அதிகளவில் இருப்பது யாவரும் அறிந்த விடயம் ஆகும். பணமும், பாசமும் வெவ்வேறு துருவங்களாக கணிக்கப்படுகின்ற போதிலும் அவை இரண்டையும் ஒருமித்து கையாள்வது என்பது மிகவும் சிரமமான காரியம் ஆகும்.

கடின உழைப்பு. விடாமுயற்சி, நேர்மையான நோக்கங்கள் மற்றும் மனதில் நெகிழ்திறன் ஆகியவற்றின் மூலம் உங்களின் உண்மையான, வலுவான காதல் உறவை கட்டியெழுப்பும் இலக்கை அடையலாம். அன்பு வழியினை  மேம்படுத்த  பல தடைகள் கண்டிப்பாக அமைந்துவிடும் . அது உங்களது மகிழ்ச்சி  நிலையினை நீ ங்கள் கையாளும் விதங்களைப் பொறுத்து மாறுபடும் . 


உறவுகளில் தோன்றும் பல பிரச்சினைகளுக்கு மூலமாக இருப்பது பணம் மற்றும் பணம் சார்ந்த பிரச்சினைகளே ஆகும். பலரின் உறவுகள் ஆரம்ப நிலையிலேயே முறிந்துபோவதும் இந்த பணத்தின் காரணத்தினால் ஆகும். இது அன்பின் அடித்தளமான உறவின் பந்தத்தினையே வேரறுக்க செய்வதும் தற்காலத்தில் நாம் காணக்கூடிய விடயமே ஆகும்.

ஆனால் பணமின்மை என்ற பொருளாதார சிக்கல்களை உண்மையான அன்பு மற்றும் ஆழமான பந்தங்களின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்பதை நீங்கள் உணரவேண்டும். இது பல்வேறு நபர்கர்களின் வாழ்க்கை நிலையில் இருந்து நாம் அறியக்கூடியதாயுள்ளது. உறவுகளில் இருக்கும் உண்மைத்தன்மை , நம்பிக்கை போன்ற எவ்வகையான பொருளாதார சிக்கலையும் சீர்செய்ய கூடியது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.


காதல் உறவில் பணப்பிரச்சினை ஏன் ஏற்படுகின்றன?

ஆணுக்கும், பெண்ணுக்குமான இன்றைய கால உறவினை நிர்ணயம் செய்வதில் பணம் பெரும் பங்கினை வகிக்கின்றது என்றே கூற வேண்டும். பாசம் மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களின் மீதான ஈர்ப்பு நிலை குறைவடைந்து அனைத்து உறவுகளும் பணம் என்ற  மையமாகக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. உறவுகளின் முக்கியத்துவம் குறைவடைந்து பணத்தின் முக்கியத்துவமே வலுவடைந்துவருகின்றது. 

நாளுக்கு நாள் மனிதனது தேவைகளை விட விருப்பங்கள் எண்ணிக்கையே அதிகரித்து வருகின்றது. தேவைக்கு பொருட்களை அல்லது சேவைகளை பெற்றுக்கொள்வதை தாண்டி தற்போது விருப்பத்தேர்வுகளுக்கு பல தேவைகளை உருவாக்கிக்கொண்ட நிலையினை மனிதன் தமக்கு தாமே ஏற்படுத்தி வைத்துக்கொண்டான். 

இவ்வகை நேரங்களில்  ஆணும், பெண்ணும் கண்டிப்பாக வருமானம் உழைத்திட வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களது அனைத்துவித சிந்தனைகளும் , செயல்களும் பணம் மற்றும் பொருளாதாரம் என்ற விடயங்களை மட்டுமே சார்ந்து காணப்படுகின்றது. இந்த நிலையில் உறவுகளுக்கு இடையிலான பிணைப்பு மற்றும்  உணர்வுபூர்வ விடயங்கள் என்பன மதிப்பற்று போய் விடுகின்றன.

இவ்வகை நிலைகளின்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவில் தவறுதலான புரிதல்கள் மற்றும் சிற்சில பிணக்குகள் போன்ற பணம் மற்றும் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே உருவாகி வருகின்றன . அத்துடன் வருமான பாகுபாடு , வருமானம் மற்றும் செலவினங்களில் ஏற்படக்கூடிய சீரற்ற தன்மையையே அனைத்திற்கு முக்கிய காரணி என கூறாத நபர்கள் இல்லை . 

பணத்துக்கும் பாசத்துக்குமான பிணைப்பு.


எவ்வகையிலும் பணம் மற்றும் பொருளாதார நிலைகளும் , உறவுகள் இடையிலான பந்தங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைப்பினை ஏற்படுத்திக்கொண்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. வாழ்க்கைநிலை என்ற யதார்தத்தினை பார்ப்பதற்கு கண்டிப்பாக பணம் என்பது அத்தியாவசிய பொருள் என்பது முதலிடம் பெறுகின்றது. அதனை சீராக வழிநடத்துவதனை பல உறவுகள் செய்ய தவறிவிடுகின்றன. 

பெண்கள் எவ்வகையில் சம்பாதித்தாலும் தமக்கான துணையினை தேடும்பொழுது கண்டிப்பாக பொருளாதார நிலையினை கருதுவதற்கு தவறுவதில்லை, அவ்வாறே ஆண்களும் பெண் துணைகளை தேடும் பொழுது அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப பின்னணியுடனான பொருளாதார நிலைகள் பற்றி சிந்திக்க தவறுவது இல்லை. இது எந்த வகையிலும் தவறு என்று கூறிவிட முடியாது. ஏதேனும் ஒரு இக்கட்டான நிலையில் தமது துணையின் உதவியை நாடுவதற்கு அவர்களின் பின்புலமும் , பொருளாதாரமும் கைகொடுத்து காக்கும் என்ற அடிப்படையான நம்பிக்கையே ஆகும். அனால் இவை உணர்வுபூர்வமான பிணைப்பினை எந்தவகையிலும் பாதிப்பதாக அமைந்துவிட கூடாது.

உறவுகளை வேர்  அறுக்கும் பணப்பிரச்சினைகளின் ஆணிவேர்  

குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணம், பணத்தின் சமமற்ற செலவினமாகும். வருமானத்தினை குடும்ப உறவுகளுக்காக செலவு செய்யும் உறவுகளுக்கும் சொந்த செலவினங்கள் மற்றும் விருப்பங்கள் இருக்கும் என்பதனை சக உறவுகளே உணரத் தவறுவதுவும் காரணி ஆகும். அத்துடன் விட்டுக்கொடுப்புக்கள்  மற்றும் திருப்தியற்ற தன்மை  போன்றனவே இவ்வகையில் சமமற்ற செலவினங்களுக்கும்   உறவிலான விரிசலுக்கும் ஒரு காரணியாகவும் அமைந்துவிடுகிறது. இதன் பின்னணியில் பல பாரிய பின்னடைவுகள், பிரிவுகள் , முரண்பாடுகள் தோன்றவும் செய்கின்றன.

உறவுக்கு மத்தியில் பணம் தேவையா?

உறவுகளின் பிணைப்பானது என்னதான் உணர்வுபூர்வமாக இருந்த போதிலும் அதன் அடுத்த நகர்வுக்கு கண்டிப்பாக பணம் அத்தியாவசிய தேவையாகின்றது. வெறுமனே உறவின் பிணைப்பில் உருவாகும் உணர்வுகளில் மட்டும் அக்கறை செலுத்துதலானது வாழ்க்கைக்கு  உதவிடாது. நமது எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு, கண்டிப்பாக ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டியது ஆகும். வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தின் முன்னேற்றம் தான் உறவுகளின் வெற்றியும் ஆகும் என்பது அறியப்படவேண்டியது ஆகும்.

தற்காலத்தில் பல உறவுகளின் பிரிவுக்கு பணம் காரணம் என்பதனை கூற வேண்டும். பணத்தின் மீதான அதீத கரிசனை மட்டும்  உறவுகளை வலுப்பெற செய்யாது. பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதால் பல உறவுகளின் மத்தியிலான உணர்வுநிலை பிணைப்புக்கள் அற்றுப்போய்விடுகின்றன. பல பிரிவு, முரண்பாடு, என்பன கடந்து குடும்ப சீர்கேடுகள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையிலான பாதிப்பு போன்ற இதன்மூலமாக ஏற்படுவதனை இனம்காண முடிகின்றது.

 

 

இறுதியாக பணமானது உறவுக்கு அவசியமானது என்பது எந்தவகையில் உண்மையோ அதே வகையில் உறவுகளின் மீதான உணர்வு பூர்வ விடயங்களுக்கு பணத்தின் தலையீடு பாதிக்குப் பாதியே தேவையானது என்று கூறவேண்டும். அதாவது வாழ்க்கைத்தரம் , முன்னேற்றம் மற்றும் பொருளாதார அடிப்படை நிலைகளை நிர்ணயிக்கு பணமானது நமது உணர்வுகளின் தாக்கத்தை ஏற்பாருத்தும் உறவுகளின் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது. அளவுடனான செலவினங்கள், உறவுகள் இடையிலான புரிதல்கள் போன்ற விடயங்களை நாம் பின்பற்றுதலானது பணத்துடன் சேர்ந்த பாசமான உறவினை கட்டியெழுப்பிட நமக்கு வழிவகுக்கும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பலருக்கும் உன்னதமான உறவுகள் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது வெகு தூரம் இல்லை. இதற்க்கு அடிப்படை காரணிகள் ஆயிரம் இருப்பினும் உறவுகளின் இடையிலான பிரிதல்களே முக்கியமான அம்சமாக திகழ்கின்றது. எனவே புரிந்துணர்வு கொண்ட எமது உறவின் துணைகொண்டு  வாழ்க்கையில் வெற்றிகளை தக்கவைத்த்த்துக்கொள்ள முடியும் என்பது ஐயமில்லை