நிராகரிப்பு பயத்தில் இருந்து வெளிவருவதற்கான வழிகள் 

நிராகரிப்பு பயத்தில் இருந்து வெளிவருவதற்கான வழிகள் 

பயத்தினை புறம்தள்ளிட தினசரி முயற்ச்சிக்க வேண்டிய அணுகுமுறைகள்.

14/09/2018 | Views 240

தொழில் மற்றும் வாழ்க்கையின் ஏதேனுமொரு புதிய அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டிய பொழுது பல்வேறு அச்சங்களும், தடுமாற்றங்களும்  தோன்றும் என்பது மறுப்பதற்கு இல்லை. அவை அனைத்திலும் மிக முக்கியமான பயமே தமது முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு விடுமோ என்பதுவே ஆகும்.

நிராகரிப்பு பயம் (Rejection Fear) என்பது அனைத்து தரப்பினருக்குமான பொதுவான பயமே. இது திடீரென ஏற்படுவதும் இல்லை, அவ்வாறே உடனடியாக போக்கக் கூடியதும் இல்லை. இதன் காரணமாக பலரது வாழ்க்கையும் பாதியிலேயே அஸ்தமிக்கின்ற கவலையான நிலை இருக்கின்றதனை மறுப்பதற்கு  இல்லை. இந்த நிராகரிப்பு அச்சத்தினை மனதில் கொண்டு பாதிபேர் துணிவுடன் செயல்படுவதனையே  மறுத்து விடுகின்றனர்.

இவ்வகை அம்சமானது நாம் எந்தவொரு செயல்களையும் செய்வதற்கு முன்னதாக இயல்பாகவே தோன்றும் என்பதனை நமது முக பாவனைகளை வைத்தே அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே அந்த வெளிப்படுத்தல்களின் மூலமாக எமது முயற்சிகளில் பல தோல்வியிலேயே முடிவதனை காணவும் கிடைக்கின்றது. அவற்றுக்கு சில உதாரண சந்தர்ப்பங்களை பாருங்கள்.

நீங்கள் ஒரு நேரலை கலந்துரையாடலில் பேசும்பொழுது சரியாக செய்யவேண்டும் மற்றும் அந்த பணி நிராகரிக்கப்படக்கூடாது என்ற பயம் உங்களுக்கு இருக்கின்ற பட்சத்தில் அதன் அச்சநிலை உங்கள் முகத்தில் தென்பட வாய்ப்புக்கள் உண்டு . இது உங்களின் பேச்சு மற்றும் உடலிய செயல்பாடுகளில் தடுமாற்றத்தினை ஏற்படுத்துவதுடன் உங்கள் உரையாடலிலும் தடுமாற்றத்தை இயற்கையாகவே ஏற்படுத்தும்.

சில தொலைபேசி அழைப்புக்களை மற்றும் மின்னஞ்சல்களை எதிர்கொள்ள நீங்கள் தயங்குவது உண்டு.அவற்றினை எதிர்கொள்வதால் பிற்காலத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு பொறுப்பினை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தில் அவற்றினை ஏற்க மறுப்பது உண்டு . இந்த நிலையானது நீங்கள் ஏற்கவிருக்கும் அந்த பொறுப்பானது சரியாகசெய்துமுடிக்கப்படாது விடுமோ என்ற பயத்தின் காரணமாகவே ஆகும். இதனால் நீங்களாகவே சில நிராகரிப்பு நிலைகளை தம்வசமாக்கிக் கொள்வீர்கள்.

இவ்வகையான நிராகரிப்பு பயத்தில் இருந்து வெளிவரவும், உங்களது தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பீட்டு சக்தியினை மெருகேற்றிக்கொள்ளவும் பின்வரும் யுக்திகளை கடைபிடிக்கலாம்.

பயத்தினை பட்டியலிடுங்கள் 

உங்களுக்கு நிராகரிப்பு பயம் ஏற்படுத்த கூடிய சந்தர்ப்பங்களை மற்றும் பயத்தினை இனம்கண்டுகொள்ளுங்கள். எவ்வகை சந்தர்ப்பங்களை நீங்கள் தவிர்க்க நினைக்கின்றீர்களோ, அவற்றினை இனம்கண்டு அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு உங்களை நீங்களே பழக்கப்படுத்திக்கொள்வது சிறந்த உபாயம்.

முதலில் சில யதார்த்த நடைமுறைகளை ஆமோதிக்கவேண்டும். நீங்கள் விடும் சிற்சில தவறுகள், எழுத்துப்பிழைகள் உள்ளிட்ட அனைத்தையும் முதலில் எழுதி பட்டியல் இடுங்கள். இது உங்களின் முயற்சி மற்றும் திறன்களை பட்டை தீட்டுவதாக அமையும். நாளை உங்கள் தொழில் முன்னேற்றம் தொடர்பிலான பதிவு உயர்வுகளுக்கு உங்களின் பெயரை அனைவரும் முன்வந்து முன்மொழியும் அளவுக்கு உங்களை திறம்பட செதுக்கிடும்.

நீங்கள் தவிர்க்கும் விடயங்களை ஏற்றுக்கொள்ள தயங்க வேண்டாம். அது உங்களுக்கு பல ஆச்சர்யம் தரும் முன்னேற்றகரமான விடயங்களை செய்வதற்கு உங்களை வழிநடத்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

 

நிராகரிப்புக்களை வரவேற்றிடுங்கள்.

எந்தெந்த சந்தர்ப்பங்களை நீங்கள் தள்ளி வைக்கின்றீர்களோ , நிராகரிக்கப்படும் என்று பயப்படுகின்றீர்களோ , அவை நிகழும் சந்தர்ப்பத்தில் முதலில் அவற்றினை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ளுங்கள் . நீங்கள் இவற்றினை கண்டு அச்சப்படுகின்றீர்கள் என்று அறிந்திடும் பொழுது அவரின் மூலமான வெளிப்பாடுகள் தலைகீழானதாக தென்படும் என்பதை கவனிப்பீர்கள்.

நிராகரிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து செயல்படுங்கள், அவற்றுக்கான காரணிகளை இனமக்கண்டு அவை உங்களுக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுத்துவது என தீவிரமாக பகுத்தறிந்து செயல்படுத்திடுங்கள் . தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வதே அவற்றினை எதிர்கொள்ள சிறந்த வழி.

உங்கள் படைப்புக்களை தீவிரமாக செயல்படுத்த தவற வேண்டாம். அவற்றின் இலகுத்தன்மை உங்களை சிலநேரங்களில் சோம்பல் ஆக்கிவிடும் . எனவே உங்கள் செயல்களுக்கு நீங்களே சவால்விடும் தன்மையினை வளர்த்துக்கொள்ளுங்கள்.

 

தினசரி அசௌகரியப்படுங்கள்.

இலகுவாக அடைந்துகொள்ளும் வெற்றியின் மூலம் உங்களால் சிறந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியாது. துன்பங்களின் மூலமே பல நல்ல விடயங்களை எம்மால் கற்றுக்கொள்ள முடியும் என்பது யதார்த்தமான உண்மை. இவ்வகை அசௌகரிய நிலைகள் மூலமே பயமும் , நிராகரிப்பும் ஏற்படுகின்றன  உணர்ந்துகொள்ளுங்கள்.

நிராகரிப்பு பயத்தை கடப்பது என்பது உடனே நடக்க கூடிய காரியம் இல்லை . உங்களின் ஒவ்வொரு செயல்களின் மூலமும் , நடைமுறைகளின் மூலமும் மெதுவாகவே அவை நிகழும். அசௌகரிய தன்மைகளுக்கு பயந்து உங்கள் முயற்சியில் பின்வாங்கிட வேண்டாம். எவ்வாறாயினும் உங்கள் இலக்கு நோக்கியதான ஒவ்வொரு முன்னெடுப்புகளை விடாமல் செயல்படுத்துங்கள்.


மகிழ்ச்சியை  அனுபவித்திடுங்கள்.


உங்களின் மகிழ்ச்சியான தருணங்கள்  தரும் உன்னத அனுபவத்தினை அனுபவிக்க தவறிட வேண்டாம், மகிழ்ச்சி நிலையின் மூலம் பல நல்ல அனுபவங்களை நாம் உணர்வது நம்மை உத்வேகப்படுத்தும்.

நண்பர்கள், உறவுகள் மூலமாக நாம் ஒரு சௌகரியமான மனோநிலையினை உணர்வோம் , அவை நம்மை மகிழ்ச்சியுடனும் நல்ல விடயங்களுக்கு உத்வேகத்துடன் செயல்படவும் தூண்டும் எனவே இவ்வகை மகிழ்ச்சி தரும் சந்தர்ப்பங்கள் மூலம் நம்மை நிராகரிக்கும் விடயங்களில் இருந்து பயமின்றி வெளிவர முடியும்