ஆரோக்கியமான தொழில்முனைவோராக மாற 5 வழிகள் 

ஆரோக்கியமான தொழில்முனைவோராக மாற 5 வழிகள் 

வெற்றிகளை அனுபவிக்க ஆரோக்கியமாக இருக்க வேண்டியது  அவசியம் 

26/09/2018 | Views 173

ஒரு வெற்றிகரமான வியாபாரத்தை ஆரம்பித்து, அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாம் அர்ப்பணிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளது. ஒரு தொழில் முனைவோராக மற்றைய நபர்களை விட அதிகபட்சமாக உழைத்திட நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அதற்கென நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகளை நீங்களே தளர்த்திக்கொள்வது நல்லது.

ஆயிரம் குறைகளை கொண்ட வாழ்க்கை முறையில் முழு சுகாதாரம் என்பது நூறு சதவீதம் சாத்தியம் இல்லை என்ற போதிலும், தொழில் முனைவோர் மற்றும் தொழில்களில்  சிரமமாக ஈடுபடுவோர் கண்டிப்பாக அதிக கரிசனையுடன் உங்களின் உடற் சுகாதாரம் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகின்றது.

ஒரு தொழிலதிபரின் அன்றாட வேலைகளுக்கான அட்டவணையில் இடைவெளிகள் இருப்பது மிகவும் அரிதானது. இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தினையே ஏற்படுத்தக் கூடியது.எவ்வாறாயினும் தொழிலில் வெற்றிபெற வேண்டிய தொழிலதிபர்கள் பின்பற்றிட வேண்டிய ஆரோக்கிய அணுகுமுறைகள் இவைதான்.

தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியை கட்டாயமாக்குங்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்வதானது உங்கள் உடலையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவிடும் என வைத்தியர்கள் கூறுகின்றனர். அவ்வாறே நேர்மறையான எண்ணங்களையும் ,வெளிப்புறத் தோற்றத்தினையும் பராமரிப்பதுவே வெற்றிக்கான ஒரு வழி ஆகும் என கருதப்படுகின்றன,

பல்வேறுபட்ட தடைகளுக்கும், சவால்களுக்கும்  தொழிலதிபர்கள் தினசரி முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அவற்றினை சமாளிக்க எவ்வகை நிலையிலும் நாம் தயாராக இருக்க வேண்டியும் உள்ளது. தினசரி காலையில் மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது உங்கள் அலுவலகங்களில் ஏற்படும் பல்வேறு ரீதியிலான சவால்களை இலகுவாக சமாளிக்க உதவிடும் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

தொழிலதிபர்களுக்கு இருக்க கூடிய மிகப்பெரும் சவாலான தொழில் மற்றும் வாழ்க்கை சமநிலையினை பேணுவதற்கும், மற்றும் எவ்வகை சிக்கல்களையும் தீர்க்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் தினசரி உடற்பயிற்சியானது பெரும் உதவி புரிகின்றதாக அறியப்படுகின்றது.

நீங்கள் உடற்பயிற்சியினை மேற்கொள்ளும் நேரம் எப்போதாகவும் இருக்கலாம், ஆனால் அதற்கான சரியான முக்கியத்துவத்தினை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.


முடிந்தவரையில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது.

ஆரோக்கியமான உணவு உட்கொள்வதே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எளிதான வழிகளில் ஒன்றாகும், மேலும் உங்களின் உணவுப் பழக்கங்களில் மிகச் சிறிய மாற்றங்கள் மூலமாக கூட  பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, குளிர்பானங்கள், சோடா என்பனவற்றை பருகுவதை தவிர்த்து அவற்றுக்கு பதிலாக அதே நேரத்தில் சுத்தமான நீரை பருகுவது, மற்றும் சர்க்கரை அதிகமான உணவுகளை தவிர்ப்பட்டது உள்ளிட்ட சிற்சில மாற்றங்களின் மூலம் பேரளவிலான ஆரோக்கிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.


கடைகளிலும், வெளியிடங்களிலும் மதிய உணவு உட்கொள்வதை தவிர்த்து வீடுகளிலேயே சத்தான உணவுகளை செய்து கொண்டு வந்து அருந்துவதானது உங்கள் உடல் நலத்தை பாதுகாக்கும் ஒரு சிறந்த யுக்தி ஆகும். அத்துடன் உணவு சமைக்கும் போது எண்ணெய் மற்றும் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதை தவிர்த்து நீங்களே உங்கள் உணவு கட்டுப்பாட்டினை மேற்கொள்வது சிறந்த யுக்தி ஆகும். அத்துடன் பொரியல் உணவுகளை கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது.

ஓய்வுக்கான நேரத்தை  ஒதுக்குங்கள் 

ஒரு தொழிலை முன் கொண்டு செல்வதானது மிகவும் மனஅழுத்தத்தினை  ஏற்படுத்தக்கூடிய சிரமமான காரியம் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். தொடர்ச்சியான வேலைப்பழுவில் இருந்து ஓரளவேனும் நீங்கள் ஓய்வினை எடுக்க வேண்டியது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என கூறப்படுகின்றது.


தொழிலதிபர்கள் பலரும் தொடர்ச்சியான ஓய்வின்றிய வேலைகளை மேற்கொள்வதன் மூலம் வெற்றியை இலகுவாக அடையலாம் என நினைப்பது உண்டு. ஆனால் அந்த வெற்றிகளை அடைந்துகொள்ள உடலளவிலும் , மனதளவிலுமான ஆரோக்கியத்திற்கு ஓய்வும் அவசியம் என்பதனை மறந்துவிடுகின்றனர்.

ஓய்வு நேரத்தினை உகந்த முறையில் செலவிட நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை தேர்வு செய்து மேற்கொள்வது சிறந்தது. கோல்ப், பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகள் மற்றும் நீச்சல் போன்றன உடல் ஆரோக்கியத்தை மேலும் வலுப்படுத்த உதவிடும் என்பதை மறுக்க வேண்டாம்.

 

வேலைகளுக்கான அறிவுறுத்தல்களை அட்டவணைப்படுத்தல்.

நீங்கள் தினசரி செய்யும் வேலைகளை அட்டவணைப்படுத்தி அதனை காட்சிப்பட வைத்துக்கொள்வதானது உங்களை அந்த வேலைகளை செய்வதற்கு அறிவுறுத்திக்கொண்டிருக்கும் . 

ஒழுங்கமைக்கப்பட்ட அட்டவணைப்படுத்தும் வேலைகளை நேரத்திற்கு செய்துகொள்வதன் மூலம் பல்வேறு தாமத நிலை மற்றும் சிக்கல்களை தவிர்த்துக்கொள்ள முடியும். 


மன அழுத்தத்தினை   நிர்வகித்துக் கொள்ளுங்கள் 

ஒரு  தொழிலதிபராக மனஅழுத்தம் ஏற்படாமல் இருப்பது சிரமமான காரியம் . ஆயினும் அவற்றினை நிர்வகிப்பதில் தொழிலத்திபர் ஒருவரின் தனித்திறமை அடங்கியுள்ளது. மனஅழுத்த நிலையானது உங்களின் முடிவெடுக்கும் திறனை கூட பாதிக்கும். 

மனஅழுத்தம்  வெற்றியை குறைக்காது . ஆயினும்  மனஅழுத்த காரணிகளால் எமது வெற்றிக்கான செயற்பாடுகள் தடைபடும். எனவே மன அழுத்தம் ஏற்படாத வகையில் எமது வேலைகளை நிர்வகிப்பது சிறந்த பலனை தருவதுடன் எமது உடல் மற்றும் மனநிலைகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.