இலங்கையில் தடம்பதிக்கும் பிட் கொயின் முறை

முதலீட்டு சந்தைக்கு ஆரோக்கியமானதா? அல்லது சட்ட விரோதமானதா ?

மாறிவரும் உலகின் வேகத்திற்கு அமைய தமது கட்டமைப்பையும் மாற்றிவரும் உலக நாடுகளில் பொருளாதாரமும் , தொழில்நுட்பமும் ஒன்றை ஒன்று ஆண்டுகொள்ளும் நாடுகளில் இலங்கை முக்கிய இடம் வகிக்கின்றது. அந்த வகையில் உலகில் தற்போது முன்னிலை வகிக்க கூடிய மறையீட்டு செலாவணி முறைமை இலங்கையில் எவ்வாறு தமது தடத்தினை பாதிக்கின்றது என பார்ப்போம் 

மறையீட்டு செலாவணி (Cryptocurrency) என்பது ஒரு புது வகையான எண்ணியல் செலாவணி (Digital Currency) முறை. இதை மாற்றுச்செலாவணி என்று சொல்லலாம். இதை எளிமையாக விளக்க வேண்டும் என்றால் நீங்கள் கடைக்கு சென்று பத்து ரூபாய் கொடுத்து ஒன்பது ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கினால் கடைக்காரர் மீதமுள்ள உள்ள ஒரு ரூபாய்க்கு வேகமாக ஒரு மிட்டாய் ஒன்றை கொடுத்து விடுவார். இது ஒரு வகையான மாற்று செலாவணி. நீங்கள் ஒரு பிரபலமான துணிக்கடையில் துணிகளை வாங்கினால் அவர்கள் உங்களுக்கு ஒரு அன்பளிப்பு பற்றுசீட்டு (Gift Voucher) வழங்குவர். இதுவும் ஒரு மாற்று செலாவணி முறை தான். உலகில் எந்த நாட்டு அரசாங்காங்கத்தின், மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாமல், நாம் பயன்படுத்தும் செலாவணி முறைக்கு மாற்றாக, தன்னிச்சையாக தனி கணினி அமைப்பின் பிணையத்தின் (Network) கீழ் இயங்குகிறது இந்த மறையீட்டு பண பரிமாற்ற முறை.

நமது அனைத்து தரவுகளும், பரிவர்த்தனைகளும் மென்பொருள் மூலம் மறையீட்டு குறிப்புகளாக (Encrypted Codes) பரிமாறப்படும். சம்பந்தப்பட்ட இருவர் தவிர எவராலும் பரிவர்தனை நடத்தியவர்களின் விவரங்களை கண்டறிய இயலாது. தலைகீழ் பத்மாசனம் செய்தாலும் பலனளிக்காது.

இந்த முறையை முதன் முதலில் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் சடோஷி நகமோடோ என்பவர். 2008 ல் இதற்கான குறிப்புகளை ஒரு பிரபலமான செய்தித்தாளில் வெளியிட்டுள்ளார். பின்பு 2009ல் இதையொட்டி இதற்கான மென்பொருளையும் அவர் அறிமுகம் செய்துள்ளார். அவர் முதன் முதலில் உருவாக்கிய இந்த பணத்தின் பெயர் பிட்காயின். இன்று உலகம் முழுதும் 900 வகை மறையீட்டு செலாவணி முறைகள் வந்துவிட்டன. ஆனால் முதன் முதலில் தோன்றியதால் பிட்காயின் அடிப்படை பணம் என்ற அந்தஸ்தை பெறுகிறது. ரூபாய்களை நாம் பைசாக்களாக செலவு செய்வது போல் பிட்காயின் பிரித்து செலவு செய்தால் அதன் மதிப்பை சடோஷி என்றே அழைகின்றனர்.

இந்த நாணய அலகின் குறியீடு BTC என்று அழைக்கப்படும்.

இதை விளக்க முற்படும்போது கடினமாக தெரிந்தாலும், இது பயன்படுத்துவதற்கு மிக மிக எளிமையானது. இதற்கான பயனர் மென்பொருளை உங்கள் கணினியிலோ கைபேசியிலோ தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இது தான் உங்களுக்கான பணப்பை (BITCOIN WALLET). இதை பயன்படுத்தும் அனைவர்க்கும் தங்கள் பணப்பை முகவரி பிரத்யேகமாக அளிக்கப்படும்.

நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்ப விரும்பினால் உங்கள் மென்பொருளில் இருந்து நீங்கள் அனுப்பும் நபரின் முகவரியை தட்டச்சு செய்து தொகையை பதிவு செய்தால் போதும். உடனே அது அவரது கணக்கிற்கு சென்று விடும். நீங்கள் மின்னஞ்சல் அனுப்புவது போல் எளிதானது இதன் செயல்பாட்டு முறை. உங்கள் பணப்பை முகவரி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மாறுபடும். ஒருவரது பணப்பையில் இருக்கும் பணத்தை அடுத்தவர் திருடாமல் இருக்க, ஒவ்வொரு பயனர் மென்பொருளோடும் ஒரு ரகசிய தகவல் (PRIVATE KEY) இருக்கும். பரிமாற்றத்தின்போது பிட்காய்ன் முகவரியோடு இதுவும் சேர்த்து அனுப்பப்படும். அது சரியாகப் பொருந்தினால் மட்டுமே பரிமாற்றம் வெற்றிகரமாக நடக்கும்.

இணையத்தின் ஒரு பிணையத்தின் கீழ் சங்கிலி தொடர் போல இயங்கும் இந்த கட்டமைப்பில் உங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனையும் சில நிமிடங்களில் மறையீடுகளாக உலகம் முழுவதும் உள்ள இதற்கான மென்பொருள் பயன்பட்டாளர்களின் பொது கணக்கேட்டில் ஏற்றப்படும். இதனால் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

நீங்கள் பிட்காயின், ஃபெதர்காய்ன், லைட்காய்ன் என்று எதை வாங்க விரும்பினாலும் இதற்கென்று தனியாக இயங்கும் பரிமாற்று இயங்குதளங்களை அணுகலாம் அல்லது நேரடியாக தனி நபர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

சில நாட்டு அரசாங்கங்கள் மறையீட்டு செலாவணி முறையை நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகரித்துவிட்டன. முதலீட்டு சந்தையில் மக்களின் பார்வை இப்பொழுது இதன் பக்கம் திரும்பியுள்ளது. ஒரு பிட்காயின் இப்பொழுது இலங்கையின் ரூபாய் பெறுமதியின் படி 2354807.10 இலங்கை ரூபாயாக மதிப்பிடப்படுகிறது.

 செலவு குறைவாக இருக்கும் காரணத்தினால் இந்த பிட் கொயின் முறைமை ஏற்புடையதாக கருதப்படுகின்றது .இது தானியங்கி முறை மூலம் ரகசிய குறியீட்டின் உதவியுடன் பரிமாற்றப்படுவதினால் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது.

இந்த மறையீட்டு செலாவணி முறைமையில் முதலீடு செய்வது தொடர்பில் சில அசௌகரியங்களும் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்.

இது முற்றிலும் மின்னியக்க முறைமை கொண்டது என்பதால் இணைய திருடர்களின் மூலம் இலகுவில் சூறையாடி விட முடியும் என பொருளியலாளர்கள் அஞ்சுகின்றனர் . அத்துடன் அனைத்து பரிமாற்றங்களும் ஒரு மைய சேவையகம் கொண்டு இடம்பெறாது , மாறாக வலைப்பின்னல் முறைமையினை கையாள்வது எனவே அதன் பயனாளர்களிடையேயே ஏதேனும் தொடர்பாடல் முறையில் தடங்கல் ஏற்படும் இடத்து முழு சேவையும் துண்டிக்கப்படும் அபாயம் கொண்டுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்

ஆனாலும் இவ்வகை செலாவணி முறைமை மேலைத் தேய நாடுகளில் மட்டுமே இன்றுவரை பிரபல்யம் அடைந்து வந்துள்ளது. மட்டுமன்றி ஆசியாவை பொறுத்த வகையில் சிங்கப்பூர் நாட்டில் மட்டுமே இந்த மறையீட்டு செலாவணி தற்போது புழக்கத்தில் உள்ளது. இந்த முறைமையில் கருப்பு பண மோசடிகளை இலகுவில் நடத்திவிடலாம் என அறியப்படுகின்ற காரணத்தினால் இலங்கை போன்ற பின் தங்கிய நாடுகளின் முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கி என்பன இதற்கான அங்கீ காரத்தினை வழங்கிடவும் பரிமாற்���லை மேற்கொள்ளவும் தயங்கி வருகின்றமை அறியக்கூடியதாக உள்ளது.

அவ்வாறே கற்றல் நிறுவனங்களில் ஒரு பாடத்திட்டமாக இது பற்றிய அறிவூட்டல்களும் ஆய்வுகளும் தொடர்ந்தும் மேற்றக்கொண்டு மட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.


நாணயம் என்பது இரு பக்கத்தினை கொண்டது , அது போன்றது இந்த மறையீட்டு செலாவணி முறைமை எனப்படுவது. இதற்க்கு இலங்கை போன்ற நாடுகளில் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் முதலீட்டு வர்த்தகத்தில் இலாபகரமான நிலைமை ஏற்படும் அதே நேரம் சட்டவிரோத பரிவர்த்தனை முறைகள் கூட வளர்ச்சி பெரும் என அறியப்படுகின்றது.

Article By TamilFeed Media, Canada
2839 Visits

Share this article with your friends.

More Suggestions | Business