பரிதவிக்கும் காலநிலை

இன்று அதிகாலை எதிர்பாராத மழை. இது மழை பெய்யக் கூடிய காலகட்டமே இல்லை. மதியம் கடும் வெயில் இது என்ன கோடைக் காலமா?

எந்த நேரத்தில் எங்கு மழை பொழிவது, எங்கு காற்றடிப்பது, எங்கு புயலடிப்பது, எங்கு தனல் நெருப்பாய் வெப்பத்தை கொட்டுவது என்று காலநிலைக்கு இங்கிதம் இல்லாமல் போய்விட்டது. காலநிலையை இப்படி புலம்பவிட்டவர்கள் யார்?

இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல பாகங்களிலும் இந்த நிலைதான். இதற்கு பூமி எந்த பிராயச்சித்தத்தை தேடும். மனிதர்கள் விட்டுக்கொடுக்காமல் செயற்பட்டால் அதற்கு ஈடுகொடுக்க பூமியால் இயலாது.

எமது நாட்டில் மலையகப் பகுதிகளில் ஆங்காங்கே மழை காலநிலை நிலவிய போதும், வரட்சியான பகுதியில் மழை காலநிலை அரிதாகவே உள்ளது. ஜமெய்க்கா, இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள், அமெரிக்கா, அவுஸ்திரேலிய உள்ளிட்ட பல பிராந்தியங்களில் அடை மழையும் வெள்ளமும் தொடர்கின்றன. இதேவேளை, அரிஷோனா, ஸ்பெயின், ஆபிரிக்கா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் மிக கடுமையான வெப்பநிலை நிலவுகின்றது.

கடந்த வருடம் தொடக்கம் நிலவிய ‘எல் நினோ’ காலநிலை காரணமாக உலக காலநிலையில் தளம்பல் ஏற்பட்டு, பாரிய அனர்த்தங்கள் நேர்ந்தன. ஒரு புறம் வரட்சி மறு புறம் கடும் வெள்ளப்பெருக்கு என எதிர்பாராத இன்னல்களை உலக மக்கள் எதிர்கொண்டனர். கடந்த மாதம் எல் நினோ முடிவுக்கு வர தற்போது லா நினா எனப்படும் குளிர் காலநிலை தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதன்காரணமாக, திடீர் பனிப்பொழிவு, மழை காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்படக் கூடும் என வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நாசாவின் செய்மதி படங்களின் அடிப்படையில் பருவப் பெயர்ச்சி காற்றுகள் பலவித கோணங்களில் தெற்காசியாவை கடந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான வடிவங்கள் அவதானிக்கப்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது. பருவ மாற்றங்கள் காரணமாக ஏற்படும் மழைவீழ்ச்சி காரணமாக நீர்நிலைகள் நிரம்பி விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் செழிப்புறுவதற்கு உதவியாக இருக்கின்ற போதும், வெள்ளம், மண்சரிவு போன்ற பாரிய இயற்கை அனர்த்தங்களையும் ஏற்படுத்தி விடுகின்றது.

இது இவ்வாறிருக்க, உலக வெப்பமயமாதல் காரணமாக துருவ பனிப்பிரதேசங்கள் கரைந்து செல்லும் அபாயத்தை எதிர்நோக்குகின்றன. இதன்காரணமாக எதிர்வரும் 50 வருடங்களில் கடல் மட்டம் சுமார் 1 மீட்டர் வரை உயரக் கூடிய அபாயம் நிலவுதாக சர்வதேச புவியியல் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

2100 ஆம் ஆண்டளவில் 0.8 தொடக்கம் 2 மீற்றர்கள் வரை கடல் மட்டம் அதிகரிக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

வருடாந்த கணிப்பீட்டின் படி கடந்த 20 வருடங்களில் பூகோள கடல் மட்டம் 3.2 மில்லிமீற்றர்கள் அதிகரித்துள்ளது. அடுத்துவரும் 80 வருடங்களில் இந்த அளவு இருமடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என புவியியல் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Article By Mirarip MiraripXY, Australia
1586 Visits

Share this article with your friends.

More Suggestions | WORLD

Advertise Here | 6479296626