தெனாலி ராமனின் சாதூர்யம் 

குட்டிக்கதை

ஒரு முறை விஜய நகரின் அரச திருவிழா ஒன்றினை கண்டுகளிக்க அண்டைநாட்டு மன்னன் விஜயவர்தனன் அழைக்கப்பட்டு இருந்தார்.

விஜய நகர மன்னன் கிருஷ்ண தேவராயரின் அழைப்பினை ஏற்ற விஜயவர்தனன் மன்னனும் அங்கு சில நாட்கள் தங்க சம்மதித்தான்.

ஒருநாள் விஜயவர்தனன் கிருஷ்ண தேவராயனிடம், "உங்கள் அவைப்புலவர் தெனாலிராமன் மிகவும் சாதூர்யசாலி என கேள்விப்பட்டேன். அதனை நான் சோதித்து பார்க்க வேண்டும். எனவே,அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன் " என்று கூறினார். 

அவ்வாறே மேலும், "அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும்'' என விஜயவர்தனன் கேட்டுக்கொண்டான்.

அரசர் கிருஷ்ண தேவராயன் உடனே தெனாலிராமனை அழைத்து, "விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா...'' என்று உத்தரவிட்டார்.

அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை பின்பு எவ்வாறு கொண்டு வருவது என சிந்திக்க தொடங்கினான்.

ஆனால் சிரித்தவாறே, "சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன்'' என பதிலளித்துவிட்டு வெளியே கிளம்பினான். 

மறுநாள் தெனாலிராமன், சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு மட்டுமே இருந்தது.

தெனாலிராமனை ஆச்சர்யத்துடன் அரசவையில் இருந்த அனைவரும் பார்த்தனர். அப்போது தெனாலிராமன், அரசர் கிருஷ்ண தேவராயரிடம், "என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை'' என்றார்.

தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, "அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது'' என்றார்.

அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது.

அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? "காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது?'' என்று அனைவரும் வியப்படைந்தனர்.

விஜயவர்தனர் சொன்னார், "தெனாலியின் சாதுரியம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்...'' என்று புகழ்ந்தார். 

Article By TamilFeed Media, Canada
3502 Visits

Share this article with your friends.

More Suggestions | Stories